கௌரவ ஆளுநரை துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.

துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தூரன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி ஆகியோருடன் சபையின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். தமது பிரதேசங்களில் பல்வேறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் ஒதுக்கப்படும் நிதி போதாது என்று குறிப்பிட்டனர்.

சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசியத்தையும் ஆளுநரிடம் வலியுறுத்தினர். மக்களின் போக்குவரத்துப் பிரச்சினை, கமநலசேவைத் திணைக்களத்தின் சிறிய குளங்கள் கைவிடப்படுகின்ற விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.

இதன் பின்னர் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ; மற்றும் சபையின் செயலாளர் உள்ளடங்கலாக உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளுக்குரிய ஆளணி நியமனம் தொடர்பில் விசேட கரிசனை செலுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை மனுவையும் கையளித்தனர்.

சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுச் செயற்பாட்டுக்கு தொல்லியல் திணைக்களத்தால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றம்சுமத்தினர். முன்பள்ளி கல்வியை ஊக்குவிக்க சபை நடவடிக்கை எடுக்கும் நிலையில் புதிய ஆளணியை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

சபைத் தவிசாளர்களின் கோரிக்கைகளில் நிறைவேற்றக்கூடியவற்றை விரைவாக நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் பதிலளித்தார். அத்துடன் மக்களின் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி பேதமின்றி பணியாற்ற வேண்டும் எனவும், வாக்களித்த மக்களை மக்களாகப் பார்க்குமாறும் கட்சி உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடும் அவர்களிடம் காட்டவேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.