கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30.09.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

‘பாடசாலை மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீதம் குறைவடைந்து வருகின்றது. விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளைக்கூட பெற்றோர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையில் மாத்திரமே பங்கேற்கவே அனுமதிக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை முடிந்ததும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவேண்டும் என்று சென்று விடுகின்றனர். சில தனியார் கல்வி நிறுவனங்கள், பிள்ளைகள் விளையாட்டில் பங்கேற்கின்றார்கள் என்று ஆசிரியர்களிடம் கடிதம் கோருகின்றார்கள். அவ்வாறான கடிதம் வழங்கினால்தான் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து கற்க முடியும் என்று சொல்கின்றனர். அந்தளவு தூரத்துக்கு தனியார் கல்வி நிறுவனங்களின் செல்வாக்கு இருக்கின்றது. தனியார் கல்வி நிறுவனங்களை மூடுமாறு கோரவில்லை. ஆனால் நேரக் கட்டுப்பாடு விதித்து பிள்ளைகளை விளையாட்டிலும் ஈடுபட அனுமதிக்க வேண்டும்’ என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், சில பாடசாலை அதிபர்கள் மாகாணமட்டம், தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களில் ஆள்மாறாட்டம் செய்கின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட அதிபர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தேசிய மட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு வடக்கு மாகாணம் சில போட்டிகளில் தகுதி நீக்கம் கூட செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தவறிழைத்த அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். இது மன்னிக்க முடியாத குற்றம் எனக் குறிப்பிட்ட ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

அதேநேரம் சில பயிற்சியாளர்களின் நியமனங்கள் பொருத்தமற்ற வகையில் அமைந்துள்ளது. சில விளையாட்டுக்கு பயிற்சியாளர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் அந்தப் பாடசாலையில் அந்த விளையாட்டுக்கு மாணவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் அதே விளையாட்டு விளையாடக் கூடிய மாணவர்கள் உள்ள பாடசாலைக்கு பயிற்சியாளர் இருக்க மாட்டார். இதனை ஒழுங்குபடுத்தவேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மேலும், பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் சுகாதார மேம்பாடு இல்லாத சிற்றுண்டி வகைகளை விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் ஆரோக்கியத்தை இது பாதிக்கின்றது. தேசிய மட்;ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட புகையிரத பயணச் சீட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெருமளவு தொகை செலவு செய்யவேண்டியுள்ளது எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

தேசியமட்ட விளையாட்டுப் போட்டிக்கான விளையாட்டு அட்டவணை தயாரிக்கும்போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதில்லை. இதுவும் தேசிய ரீதியில் எமக்கு பின்னடைவை ஏற்படுத்துவதில் காரணமாகின்றது.

இதேவேளை, கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் போதுமானளவு இல்லை. அவற்றை வழங்கவேண்டும். மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதிக்கும் பாடசாலைகளுக்காகவது உபகரணங்களை வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். அத்துடன், வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் விளையாட்டு வாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். அதேநேரம், வடக்கு மாணவர்கள் தடகளத்தில் சாதிப்பதற்கு ‘சின்தட்டிக் ரக்’ (synthetic track) அவசியம் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் மற்றும் உறுப்பினர்களான கனகராஜா, குகன், கவிதா, ஹரிகரன் ஆகியோர் பங்கேற்றனர்.