பெண்கள் கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளனர். சுமார் 60 சதவீதமான பெண்கள் பட்டதாரிகளாக உள்ளனர் இவர்களில் 45 சதவீதமானவர்கள் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்கள். இருப்பினும் 35 வீதமானவர்களே தொழிற்துறையை பெற்றுக்கொள்கின்றனர் என்று வடமாகாண மகளிர்விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
‘சமத்துவத்திற்கான நல்வாழ்வு’ என்ற தொனிப்பொருளில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் பெண்களினால் பெண்களே இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு இணங்க , வடமாகாணத்தின் 2019 சர்வதேச மகளிர் தினம் வடமாகாண மகளிர்விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள் கூட்டுறவு உணவு வழங்கல் விநியோகம் மற்றும் தொழிற்துறை , தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 08 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண மகளிர்விவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமத்துவத்திற்கான நல்வாழ்வு இன்றைய மகளிர் தினத்திற்கான மகுட வாசகமாகும். திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள். தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைவாக கல்வித்துறையை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இந்த நிலையில் எங்களுடைய பெண் சமுதாயம் விஞ்ஞானிகளாக விமான ஓட்டியாக பல்வேறு சாதனைகள் படைத்திருக்கின்றபோதும் அதன் வீதம் குறைவாகவே உள்ளது. பெண்களும் மாற்றங்களுக்கு உள்வாங்கப்பட்டு தொழில்நுட்பம் தொழிற்துறையில் தேர்ச்சிபெற்று ஒரு நல்ல கல்வித்துறையில் நல்ல சமூகமாக மாறவேண்டும் .
பெண்கள் சமூகம் வளர்கின்றபோதும் குடும்ப வன்முறையாலும் பாலியல் துன்புறுத்தலாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையை மாற்ற நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். இதற்கான அடிப்படை காரணங்களாக மதுபாவனை , போதைவஸ்து பிரயோகம் என்பன காரணிகளாக அமைகின்றன. எனவே மதுபாவனை அற்ற போதைவஸ்து அற்ற ஒரு பகுதியாக இந்த வடக்கு மாகாணம் அமைவதற்கு எமது குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளை ஒழித்துக்கட்டுவதற்கு நாங்கள் ஒன்றுபட்டு செயற்படமுடியும் . ஆகவே போதையற்ற ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம் . யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பொருளாதாரத்துறையில் பெரும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கு வலுவூட்டவேண்டிய தேவைப்பாடு உள்ளது.
சுயதொழில்வாய்ப்புக்கள் மற்றும் கடன் வசதிகளை வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கூட்டுறவுத்திணைக்களத்தினால் கூட்டுறவு மகளிர் சுயதொழில் முயற்சிக்கடன் திட்டம் ‘மகளிர் மகுடம்’ என்ற பெயரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த கடன் திட்டதின் மூலம் மகளிர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தலா ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் கடனாக வழங்கப்படுகின்றது. அத்துடன் தொழிற்துறை திணைக்களத்தினால் தொழில்முயற்சியாளர்கள் மேலும் தொழில் விஸ்தரிப்பு செய்வதற்கான 50 வீதமான மானியம் என்பன வழங்கப்பட்டன.
இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக தென் பகுதியை சேர்ந்த சிறந்த தொழில்முயற்சியாளராக பல விருதுகளை பெற்ற திருமதி ஜானகி கத்திரியாராச்சி கௌரவிக்கப்பட்டதுடன் தென்னிலங்கையின் சிறந்த நடிகை சுவர்ணா மல்லவராச்சியும் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மாகாணமட்டத்தில் சாதனை படைத்த மகளிருக்கான கௌரவிப்பு , விருதுகள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக எழுத்தாளர் மற்றும் உளவளத்துறையாளர் கோகிலா மகேந்திரன், சிறப்பு விருந்தினர் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகவும் சேவையாற்றும் வைத்திய நிபுணர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி, கௌரவ விருந்தினர் நவம் மங்கை வாசா நினைவு ஆலயத்தின் உரிமையாளர் மற்றும் சமூகப்பணியாளர் திருமதி சுவர்ணா நவரட்ணம், சிறந்த தொழில்முயற்சியாளர் திருமதி ஜானகி கத்திரியாராச்சி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் றூபாவதி கேதீஸ்வரன், பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்தலைவர்கள், பெண் முயற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
\