வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முன்னேற்றக் கலந்துரையாடல் இன்று (17.08.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மீளாய்வு வரைவு தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கூட்டுறவு பணியாளர்களின் தகைமைகள் தொடர்பான மீளாய்வு நடைமுறை, அதன் தேவைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன், கூட்டுறவு பணியாளர்களுக்கான சம்பள மீளாய்வு தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள வரைவும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. பணியாளர்களின் பணித்தகைமை மற்றும் சேவை நிலைமைகளுடன் தொடர்புடைய விடயங்களை கருத்திற்கொண்டு, சம்பள மீளாய்வு தொடர்பான முன்மொழிவுகள் குறித்து ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

