யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் எனவும் குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக கலந்துரையாடலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும் இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அரசாங்க நிதியிலல்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.