குப்பை கொட்டுவோரைக் கண்டறிய கண்காணிப்புக் கமராக்கள் – நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் – ஆளுநர்.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம் பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்கவும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு, அதன் கீழான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

இந்த அமைச்சு மற்றும் அதன் கீழான உள்ளூராட்சித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம், கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியவற்றின் ஊடாக 852 வேலைத்திட்டங்கள் 6,955 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தமது பிரதேசங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களை அடையாளப்படுத்தி, கண்காணிப்புக் கமராக்களை நிறுவி, விதிமுறைகளை மீறுவோரைக் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கண்காணிப்புக் கமராக்களின் ஊடாக குப்பை கொட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டுவரும் நல்லூர் பிரதேச சபையின் செயற்பாட்டை ஆளுநர் பாராட்டியதுடன், இதன் மூலம் சுமார் 8 இலட்சம் ரூபா வரை தண்டத் தொகை அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நடைமுறைகள் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களாலும் பின்பற்றப்பட்டு, பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் குப்பை கொட்டும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அதேவேளை, மாகாணத்தின் எதிர்கால கழிவு முகாமைத்துவத்துக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் விளக்கமளித்தார். பல்வேறு திட்டங்களின் ஊடாக கழிவுகளை வகைப்படுத்தி, முறையான முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது நியமத் துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய கழிவுகளைத் தரம் பிரித்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார்.

குளங்கள் தூர்வாருதல் மற்றும் வாய்க்கால்களைத் துப்புரவு செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, கந்தரோடைக்குளத்தில் 28,000 கன மீற்றர் மண் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான கட்டடங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் குடிபுகு சான்றிதழ் கட்டாயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் குடிபுகு சான்றிதழ் பெற்ற பின்னர் வியாபார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விஸ்தரிப்புகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், குடிபுகு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத கட்டடங்களுக்கு இலங்கை மின்சார சபையின் மின்சார இணைப்புகளை வழங்காமல் இருப்பது தொடர்பான கோரிக்கையொன்றை ஆளுநர் ஊடாக முன்வைப்பதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அனுமதியற்ற வீதியோரக் கடைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கைகள் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக யாழ்ப்பாண நகரின் மையப்பகுதியில், இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆளுநர் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்கினார்.

அரச நிதியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை தங்களால் மேற்கொள்ள முடியாது என உள்ளூராட்சி மன்றங்கள் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட முடியாது என ஆளுநர் தெரிவித்தார். எந்த நிதி மூலத்திலிருந்து நிதி கிடைத்தாலும், தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு எனவும், அபிவிருத்தித் திட்டங்களில் அரசியலைக் கலக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளூராட்சித் திணைக்களத்தின் பல வேலைத்திட்டங்கள் முழுமையடைந்துள்ளபோதிலும், பரிசோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் நிதி விடுவிப்பில் காணப்படும் பின்னடைவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை ஆளுநர் வழங்கினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய காணிகளை அவற்றிடம் பாரதீனம் செய்வதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தார் கிடைப்பதில் நிலவும் தாமதம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் ஒப்பந்தங்களை வழங்கும் போது, தாரை மாகாண சபையின் ஊடாக விநியோகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நாளின் இறுதியாக புறப்படும் பேருந்துகளின் சேவை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக மேலதிக கலந்துரையாடலை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், சிறப்பாகச் செயற்படும் உள்ளூராட்சி மன்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள், மாகாண காணி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், நகர சபை செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மாவட்டப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.