2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 05 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன் மற்றும் கௌரவ ம.ஆ. சுமந்திரன் , கௌரவ கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் கௌரவ கஜேந்திரன் அவர்களும், ஆளுநரின் இணைப்புச்செயலாளர் மற்றும், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் பொலிஸ் அதிகாரிகள் , முப்படை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கையின் மீளாய்வு மற்றும் தொடர் நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அடுத்ததாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது கௌதாரிமுனை சுற்றுலா விடுதி அமைப்பதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோதும் இத் திட்டத்தை முழுமையாக ஆராய்வதற்காகவும் சுற்றாடல் சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் மாவட்ட செயலாளர் தலைமையிலான குழு ஒன்றினை அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கௌரவ ஆளுநர் கேட்டுக்கொண்டார். மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டமும் ஆராயப்பட்டது. அடுத்ததாக விவசாயத்துறை பற்றி கலந்துரையாடப்பட்டபோது கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்விளைச்சல் குறைவடைந்ததற்கான காரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பான அறிக்கை ஒன்றையும் தயாரித்து தனக்கு சமர்ப்பிக்கும் படி விவசாயத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வு பற்றியும் அதனால் சுற்றாடலில் ஏற்படும் பாரிய விளைவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது மேலும் கால்நடை அபிவிருத்தி , காணி , வீதி அபிவிருத்தி , மீன்பிடி , கைத்தொழில், சுகாதாரம், கல்வி, ஆகிய துறைகள் பற்றியும் அவற்றில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.