கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை (06.11.2025) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரை இடம்பெற்றது. அதன் பின்னர் இணைத்தலைவர் உரையாற்றிய ஆளுநர், ஆண்டு நிறைவடைவதற்கு இன்னமும் ஆறு வாரங்கள் மாத்திரமே உள்ள நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாக செலவு செய்து நிறைவு செய்வதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அதேபோன்று 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் அனைத்தும் ஜனவரி மாதமே மாகாணசபையால் ஆரம்பிக்கக் கூடிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டைப்போன்று அடுத்த ஆண்டும் அனைத்துத் திணைக்களங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் ஆராயப்பட்டன. தொடர்ந்து, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. வேறு பல விடயங்களும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சி.சிறீதரன், ஜெ.றஜீவன் ஆகியோரும், உள்ளூராட்சி சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.