கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பங்களின் சேர்க்கையாக விளங்கிய விவசாயக் கண்காட்சி

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில்“தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப் பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2020 ஆனது காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்துகொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.

பொதுமக்கள் நஞ்சற்ற ஆரோக்கியமான மரக்கறி பழங்களை தாமே உற்பத்தி செய்வதனை ஊக்குவிக்கும் பொருட்டும் குடும்ப அலகுகளிடையே உணவுத் தன்னிறைவினை ஏற்படுத்தும் நோக்கிலும் சேதன விவசாயத் தோட்டம், வீட்டுத் தோட்டம், மூலிகைத் தோட்டம், போன்ற காட்சிப்படுதல்களும் சேதனப் பீடைநாசினிகளான உள்ளிக் கரைசல், வேப்பிலைக் கரைசல் மற்றும் சேதன உரங்களான மண்புழுத் திரவம், மண்புழு உரம், சேதனப் பசளைப் பொதிகள் போன்றவற்றின் விற்பனையும் இவை தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், விவசாய வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் இடப்பற்றாக்குறையான நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்குப் பொருத்தமான நகர்ப்புற வீட்டுத் தோட்டம் அமைக்கும்; முறை, பொதிப் பயிர்ச்செய்கை தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்கள் விரிவான காட்சிப்படுத்தல்களுடன் இடம்பெற்றது.

விசேட விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள், மாவட்ட செயலாளர் கிளிநொச்சி திரமதி. ரூபாவதி கேதீஸ்வரன், செயலாளர் விவசாய அமைச்சு திரு.அ.சிவபாதசுந்தரன், மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் எந்திரி.வி.பிறேம்குமார் மற்றும் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி.திரு.எஸ்.வசீகரன், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற்றனர்.