கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 27 பெப்பிரவரி 2019 அன்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புனரமைப்பு நடவடிக்கைகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது பாடசாலை மாணவர்களுடனும் அதிபர் ஆசிரியர்களுடனும் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் மாணவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டுக்கொண்டார்.