மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்புவிழா நிகழ்வு 26.01.2021 அன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தொகுதியை திறந்துவைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் மாணவர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், கிராமப்புற பாடசாலைகளுக்கான வளப்பற்றாக்குறை, வளப்பங்கீடு என்பதுதான் மாகாணசபையில் தற்போது முதன்மை பெறுகின்றது. அந்த வகையில் கிராமப்புற பிரதேசங்களில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும் மிகக்குறைவாகவே காணப்படுகின்றனர். அதனால் கிராமப்புற பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை வளப்பகிர்வு செய்வது மிக பாரிய சவாலான விடயமாகவுள்ளது. இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் தொடரக்கூடாது என்ற அடிப்படையிலேயே இவ் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தின் நன்மைக்காக பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவு செய்து இவ் விஞ்ஞான ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று உங்களிடம் கையளிக்கபட்டுள்ளது. எனவே இவ் விஞ்ஞான ஆய்வுகூடமானது மாணவர்களின் சாதனைக்கூடமாக திகழ ஆசிரியர்களின் சரியான வழிகாட்டல் வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு அப்பால் மாணவர்களின் சுயமான சிந்தனைகள் தான் விஞ்ஞானம் எனவும் தெரிவித்தார்.
மேலும், விஞ்ஞான கட்டடத்தொகுதி அமைக்க ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட அரச அதிபர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன் எதிர்காலத்திலும் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக பாடசாலை சமூகத்திடம் தெரிவித்து விடைபெற்றார்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வடமாகாண கல்வி துறைசார் அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.