கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2019 ஆண்டுக்கான மாகாண கண்காட்சியானது “மகளிர் மலர்ச்சியே கிராமிய மறுமலர்ச்சி” என்னும் தொனிப்பொருளில் 09 ஏப்ரல் 2019 அன்று காலை 08.30மணிக்கு ஆரம்பமாகி இரண்டு நாட்கள் (09,10-04-2019) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியினை பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தாா்.

கண்காட்சி மற்றும் விற்பனை கூடங்களின் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகளும் இரு நாட்களாக இடம்பெற்றுவருகின்றன.

உள்ளூர் உற்பத்திகளை வினைத்திறனாக்கி சந்தை வாய்ப்பினை பெற்று வழங்கும் இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள 34 மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் 2018 ஆம் ஆண்டு NVQ மற்றும் ஏனைய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளின் ஆடை அலங்கரிப்பு, அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனைகளும் இடம்பெற்று வருகின்றன. மேலும், உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கிராமிய சங்கங்களின் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்னை செய்யப்பட்டு வருகின்றது.