எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’ இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைந்து பண்ணையை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், எமது விவசாயிகள் காலகாலமாக ‘வானம் பார்த்து விவசாயம் செய்வதாகச்’ சொல்வார்கள். அதாவது எந்தக் காலத்தில் மழை வரும் என்பதைக் கணித்து விவசாயம் செய்வார்கள். ஆனால், தற்போது அந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது. எப்போது மழை வரும், எப்போது புயல் வரும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் பெரும் அழிவுகளைச் சந்திக்கின்றார்கள். எனவே, இதிலிருந்து மீள்வதற்கும், தற்போதைய காலத்துக்கு ஏற்பத் தமது பயிர்ச்செய்கையை நவீனமயப்படுத்துவதற்கும் இவ்வாறான சமூகப் பண்ணைகள் மிகவும் அவசியமானவையாகும்.
எமது வடக்கு மாகாணம் மிகவும் வளமான நிலப்பரப்பைக் கொண்டது. ஆனால் வறுமை நிலையில் நாம் முதலிடத்தில் இருக்கின்றோம். எங்கள் விவசாயிகள் எவ்வளவுதான் கடினமாக விவசாயத்தில் ஈடுபட்டாலும், அவர்களால் பொருளாதார ரீதியில் வசதி படைத்தவர்களாக மாற முடியவில்லை. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நவீன முறையிலான பயிர்ச்செய்கை ஊடாக எமது விவசாயிகள் எதிர்காலத்தில் வசதியானவர்களாக மாறுவார்கள் என நான் திடமாக நம்புகின்றேன். அத்துடன், அவர்கள் தரமான விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளையும் பெற முடியும். எனவே, எங்கள் விவசாயிகளுக்கு இதுவொரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிராமிய அபிவிருத்தி தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. கிராமிய வீதி அபிவிருத்தியாக இருக்கலாம் அல்லது இவ்வாறான நவீன விவசாய முறைகளாக இருக்கலாம், அனைத்தும் கிராமங்களை நோக்கியே முன்னெடுக்கப்படுகின்றன. கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். எனவே, இந்த நவீன விவசாய முறைமையானது எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்,’ என்றார்.
இந்நிகழ்வில் சமூகப் பண்ணையின் பெயர்ப்பலகை மற்றும் நிர்வாகக் கட்டடத்தின் நினைவுக்கல் ஆகியன அதிதிகளால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கௌரவ அமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பூச்சி தடுப்பு வலைத் தொகுதிகள் மற்றும் பசுமைக்குடில் தொகுதிகளைப் பார்வையிட்டனர். அத்துடன், விவசாய சங்கத்துக்கான பதிவுச் சான்றிதழும், பயனாளிகளுக்கான நவீன விவசாய உபகரணங்களும் அமைச்சர் மற்றும் ஆளுநரால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 91 மில்லியன் ரூபா செலவில் இந்த நவீன சமூக விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கிராம அபிவிருத்தி அமைச்சு 76 மில்லியன் ரூபாவையும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 15 மில்லியன் ரூபாவையும் நிதியுதவியாக வழங்கியுள்ளன. அத்துடன் இத்திட்டத்துக்கான முழுமையான தொழில்நுட்ப உதவிகளை யு.என்.டி.பி. நிறுவனமே வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பூச்சி தடுப்பு வலைத் தொகுதிகளுக்கு 14 பயனாளிகளும், பசுமைக்குடில் தொகுதிகளுக்கு 10 பயனாளிகளுமாக மொத்தம் 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இப்பயனாளிகள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். இங்கு தற்போது கவெண்டிஸ் வாழை, கறிமிளகாய், குடைமிளகாய், கோவா மற்றும் தர்பூசணி ஆகிய பயிர்களின் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்திகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான குளிரூட்டி அறை மற்றும் நிர்வாகக் கட்டடம் என்பனவும் இத்தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், ‘தூய இலங்கை’ செயலணியின் மாவட்ட இணைப்பாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், யு.என்.டி.பி. நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.








