விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை நேரடியாகக் கொள்வனவு செய்வது மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கும் உதவும் கார்கில்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது எனவும், இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘சருபிம’ கல்வி உதவித்தொகை விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்;
வடக்கு மாகாணம் வளமிக்கதாகக் காணப்படுகின்ற போதிலும், எமது விவசாயிகள் கடின உழைப்பாளிகளாக இருக்கின்ற போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதுடன், அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் காலங்களில் அவை கொள்வனவு செய்யப்படாது வீணாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், கார்கில்ஸ் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமது 3 கொள்வனவு நிலையங்களினூடாக இடைத்தரகர்களின் தலையீடுகளின்றி விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்வனவு செய்கின்றது. இது எமது விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலளிக்கும் ஒரு விடயமாகும். ஆனாலும், உற்பத்திகள் பல மடங்காக அதிகரிக்கும்போது, அவற்றைக் கொள்வனவு செய்து பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான உறுதியானதொரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் எதிர்காலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள முதலீட்டு வலயங்களினூடாக, விவசாய மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களைப் பெறுமதி சேர் பொருட்களாக மாற்றுவதற்கான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். வெறுமனே விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதோடு மாத்திரம் நின்றுவிடாது, அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் ஊடாக உதவுவது மிகவும் சிறப்பானது. இது தொடர வேண்டும், என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கார்கில்ஸ் நிறுவனத்துக்கு மரக்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை வழங்கும் விவசாயிகளின் பிள்ளைகளுக்குப் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்ற 16 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.
தொழிற்கல்வியைத் தெரிவு செய்துள்ள 3 மாணவர்களுக்குத் தலா 50,000 ரூபா நிதியுதவி.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 56 மாணவர்களுக்குத் தலா 30,000 ரூபா நிதியுதவி.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 18 மாணவர்களுக்குத் தலா 15,000 ரூபா நிதியுதவி.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், முன்னாள் பணிப்பாளர், கார்கில்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






