கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை திங்கட் கிழமை (10.11.2025) ஆரம்பமாகின்றது. அதனை முன்னிட்டு பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி:

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது சமூக வரலாற்றில் கல்வி என்பது தலைமுறைகள் கடந்தும் அழியாத சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. எமது மக்கள் எதிர்கொண்ட சவால்கள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும், கல்வியை மட்டுமே முன்னேற்றத்துக்கான நிச்சயமான பாதையாகக் கொண்டு பயணித்தார்கள். இன்று இந்தப் பரீட்சைக்குத் தயாராகி நிற்கும் நீங்கள், அந்தப் பெருமைமிக்க மரபின் வாரிசுகள்.

உயர்தரப் பரீட்சை என்பது அறிவுத் திறனை மட்டுமல்லாது, உங்கள் முயற்சி, ஒழுக்கம், மனஅழுத்தத்தை சமாளிக்கும் திறன் மற்றும் இலக்கை நோக்கிச் செல்லும் மனவலிமையைச் சோதிக்கும் கட்டமாகும். இதற்காக நீண்ட காலம் நீங்கள் காட்டிய உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் நான் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

தேசிய மட்டத்தில், வடக்கு மாகாண மாணவர்கள் சிறப்பாக சாதனைகள் படைத்திருக்கின்றார்கள். இந்த ஆண்டும் கூட, நீங்கள் அனைவரும் அந்த மகத்தான சாதனைப் பயணத்தில் புதிய உயரங்களை எட்டுவீர் என நான் நம்புகிறேன்.

உங்களின் சாதனையை உருவாக்குவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆற்றிய உழைப்பை நான் இந்த நேரத்தில் கௌரவிக்கிறேன். அவர்களின் உறுதுணை, வழிகாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு இந்த வெற்றியின் பின்னணியில் நிற்கும்.

பரீட்சை நேரத்தில் அமைதியுடனும் மனத் தெளிவுடனும் இருங்கள். நீங்கள் கற்றதிலும் உங்கள் திறமையிலும் முழு நம்பிக்கை வையுங்கள். உங்களின் முயற்சிகள் நிச்சயமாக கனியட்டும்.

உங்களின் வெற்றி எமது சமூகத்தின் எதிர்கால ஒளி, என்று வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திலிருந்து பாடசாலை பரீட்சாத்திகளாக 14,217 பேரும், தனியார் பரீட்சாத்திகளாக 3,249 பேருமாக 17,466 பேர் தோற்றவுள்ளனர். இதற்காக 147 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.