கல்லுண்டாய் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவான ‘இந்திரநிலா’ மணிமண்டபம் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான மூலத்திட்டம் (Master plan) வடக்கு மாகாண பொறியியலாளர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபையால் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்திரநிலா மணிமண்டபம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வியாழக்கிழமை காலை (09.10.2025) திறந்து வைக்கப்பட்டது.

இங்கு ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் 2017ஆம் ஆண்டுதான் இந்தக் கல்லுண்டாய் குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்துக்கு மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமைப்படுத்திக் கொடுக்கப்படவேண்டியுள்ளன. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் உங்களுக்கான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைப்போல நீங்கள்தான் உங்கள் கிராமத்தை, வீட்டை முன்னேற்றுவதற்கு உழைக்கவேண்டும். உங்களின் அக்கறையிலும் அர்ப்பணிப்பிலும்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது.

இந்த மணிமண்டபத்தை நிறுவுவதில் பல இடர்களை எதிர்கொண்டமை எனக்குத் தெரியும். ஆனாலும், மிகச் சிறப்பாக இதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இங்குள்ள மக்கள்தான் இதனை மிக அழகாக அப்படியே பாதுகாத்து பயன்படுத்தவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு விரும்புகின்றார்கள். ஆனால் இங்குள்ள சிலர் அவர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மோசடி செய்கின்றனர். அதனால் புலம்பெயர்ந்தவர்கள் உதவி செய்வதற்கு பின்னடிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் ஊடாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாமல் நடப்பதன் ஊடாகவுமே வெற்றிகரமாக திட்டங்களைச் செயற்படுத்தலாம்.

இந்தக் கிராமம் மேலும் வளர்ச்சியடையவேண்டும். அதற்கு மாகாணசபை ஊடாக வழங்கக் கூடிய உதவிகளை வழங்குவேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச செயலர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.