கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அப்பகுதி மக்களின் அடிப்படை உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோர் உறுதியளித்தனர்.
‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையானது, கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) பிரதேச செயலர் க.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், செயற்றிட்டத்தின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்துகையில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள மிக முக்கியமான மூன்று திட்டங்களில் ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டமும் ஒன்றாகும். இது வெறும் பௌதீகச் சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதை மட்டும் குறிப்பதல்ல் மாறாக, எமது மனங்களைத் தூய்மையாக வைத்திருப்பது மற்றும் எமது எண்ணங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான திட்டமாகும். ஜனாதிபதி செயலகத்தில் இதற்கென விசேட செயலணி நிறுவப்பட்டு, நிதிகள் நேரடியாக விடுவிக்கப்படுகின்றன, என்றார்.
மேலும், அரசாங்க அதிகாரிகள் மக்களைத் தேடிச் சென்று சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தப்படுகின்றன. அதிகாரிகள் உங்களைத் தேடிவரும்போது பொதுமக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். கல்லாறு மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நாம் தயாராக உள்ளோம். அதேவேளை, நீங்கள் சமூகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுபவர்களாக உயர்வதற்கு, உங்கள் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
நடமாடும் சேவையைத் தொடர்ந்து, கல்லாறு பிரதேச சமூக அமைப்புக்களுடனான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தினர்.
கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழேயே கடற்றொழிலுக்குப் பதிவு செய்யவேண்டியுள்ளதால் தாம் எதிர்கொள்ளும் சவால்களை மீனவர்கள் பட்டியல்படுத்தினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் இ.சந்திரசேகர், ‘இம்முறை கண்டாவளை பிரதேச செயலகத்திலேயே பதிவுக்கான விண்ணப்பங்களை ஒப்படையுங்கள். எதிர்காலத்தில் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தினுள்ளேயே முழுமையாகப் பதிவுகளை மேற்கொள்வதற்குரிய நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தருவோம், எனக் குறிப்பிட்டார்.
கடற்றொழிலுக்குச் செல்லும் வீதியைப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வீதியை எதிர்காலத்தில் புனரமைப்பதற்குத் துரித நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
சுனாமிப் பேரிடரைத் தொடர்ந்து குடியேற்றப்பட்ட கிராமமாக இருக்கின்றபோதும், தமக்குரிய காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர். அதனை வழங்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
வீட்டுத்திட்டங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றைப் புனரமைத்துத் தருமாறும், வாழ்வாதாரத்துக்காகத் தென்னம்பிள்ளைகள் வழங்குமாறும், பெண்களுக்கான தொழிற்சாலையை உருவாக்கித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், நன்னீர் மீன்பிடியை மேம்படுத்த கமநலசேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள இரண்டு குளங்களை இணைத்துத் தருமாறும் கோரப்பட்டது. இக்கோரிக்கைகள் தொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது பிரதேசத்தில் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, பொலிஸாருடன் இணைந்து இடைவிலகலைத் தடுக்கும் நடவடிக்கைகளைக் கூட்டாக முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.
நடமாடும் சேவையின்போது மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், நீண்டகாலமாக நிலுவையிலிருந்த பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் அவர்களும், பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









