கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் விசேட காணி நடமாடும் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நடைபெற்றது.

கண்டாவளைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரடியாகப் கலந்துகொண்டு பொதுமக்களின் காணிப் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 காணி தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் (காணி) திருமதி பிரதீபன் அஜிதா மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலர் த.பிருந்தாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.