கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே மாற்றங்களை உருவாக்கலாம் – ஆளுநர்

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தேசங்களில் வதியும் சிலர் தன்னார்வமாக இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையமுடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கைக்குரியவர்களை உள்வாங்கி தொழில்முறை ரீதியான குழுவை அமைத்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். அதேநேரம் கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே இதில் மாற்றங்களை உருவாக்கலாம் என ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், அனலைதீவு மற்றும் எழுவைதீவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வசதிகளை அதிகரித்தல் மற்றும் கடல்கடந்த தீவுகளில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டன. மேலும் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இரு தீவுகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னர் எவ்வாறான வகையில் திட்டங்களை முன்னெடுப்பது என்ற அறிக்கையை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை இலக்குவைத்து முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பது எனக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், கோப்பாய் பிரதேச செயலர் (ஊர்காவற்றுறை முன்னாள் பிரதேச செயலாளர்) மற்றும் இந்த முயற்சியில் தன்னார்வமாக பங்கெடுப்பவர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.