இன்றைய நாட்டுச் சூழல் அமைப்பில் வாழும் மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் துன்பத்தை போக்குவதற்கும் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தியானப்பயிற்சிகள் மற்றும் மன வளக்கலை யோகாப் பயிற்சிகள் தேவையாக இருக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
பிறவுண் வீதியில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோயிலின் ஒன்பதாம் அகவை நாளை முன்னிட்டு அங்கு நேற்று புதன்கிழமை மாலை (15.10.2025) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் கூறியதாவது,
எமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் இந்து சமய முனிவர்கள் இமய மலைச்சாரலில் தவம் இருந்து தியானத்தின் மூலம் கிடைக்கத்தக்க நற்பேறுகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றன. அந்த வகையில் இவற்றை எமது மக்களுக்கும் வழங்கும் வகையில் யாழ் கொக்குவில் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அறிவுத் திருக்கோவில் தியான நிலையத்தின் சேவைகளைப் பாராட்டுவதோடு அச்சேவைகளை நெறிப்படுத்தி அனைவருக்கும் இப்பயிற்சிகள் கிடைக்கும் வகையில் ஆர்வமுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அறிவுத் திருக்கோவில்; தியான நிலையத்தின் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயம் உருவாக்கிக் கொள்ள முடியும். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும். தியானம் என்பது செயல் அல்ல. அது ஒரு நிலை வாழ்க்கையே. தியான நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம். எதைச்செய்தாலும் தியான நிலையில் செய்வதைப்பற்றியே பேசுகின்றோம். இத் தன்மையையே ஒவ்வொருவரும் வாழ்வில் கொண்டுவர விரும்புகின்றோம். அப்படி நடந்தால்இ ஆரோக்கியமாக இருப்பது அமைதியாக ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும்.
ஒருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்கு பலன் தராது என அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளதனை இவ்வேளை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். தியானத்தை பொறுத்தவரையில் மனச் சுத்தமே முதன்மையானது அமைதியான மனம், நல்ல கவனிப்புத்திறன், கருத்துக்களில் தெளிவு, தகவல் தொடர்புகளில் மேம்பாடு, திறன்கள் மற்றும் திறமைகள் மலர்தல், அசைக்கமுடியாத உள்;மனத்திடம், ஆற்றுப்படுத்தல், உள்மன ஆற்றுதலுடன் இணைதல், இளைப்பாறுதல், புத்துணர்வு பெறுதல் என்பவை ஒழுங்கான சீரான தியானத்தின் இயற்கை விளைவுகளாகும். கண் பார்ப்பதைவிட மனம் அறிவதை விட வேகமாக அழுத்தம் ஏற்படும் இவ் உலகில் ஆனந்தம் மற்றும் அமைதியைப் பெற தியானத்தின் சக்தியைத் தட்டிப்பெற வேண்டும்.
எல்லா நாடுகளிலுமுள்ள சிந்தனையாளர்களும் அறிஞர் பெருமக்களும் மனித குலத்தில் பரவியுள்ள துன்பங்கள் அனைத்தையும் கண்டு வருந்தி சிந்திக்கத்தொடங்கினார்கள். இத்தகைய தெய்வீக முறையான சிந்தனைகளால் ஆங்காங்கு வாழ்ந்திருந்த அறிஞர்கள் உடல் உறுப்புக்களின் இயக்கங்களையும் மன நிலைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளையும் சீர் செய்து புத்துணர்வு பெற ஏற்ற அறநெறி சார்ந்த வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடித்தார்கள். ஆங்காங்கே மக்களுக்குப் போதனைகளையும் சாதனைகளையும் வழிகாட்டி மனித வாழ்வு மேலோங்கி வாழ வழிவகுத்தார்கள். இவ்வாறாக எல்லா நாடுகளிலும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் அளித்த போதனைகளாலும்; சாதனைகளாலும் உருவான வாழ்க்கை வளப் பயிற்சிகளைத்தான் இன்று ‘யோகா’ கலை என எல்லோரும் பின்பற்றி வருகின்றோம்.
இங்கு உரையாற்ற வந்திருக்கும் எமது மதிப்புக்குரிய சுப்பிரமணியம் சதாசிவம் ‘சுகி சிவம்’ அவர்கள் இந்துமதக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தழிழ் நாட்டில் ‘இந்து தர்ம வித்தியா பீடம்’ எனும் அமைப்பை உருவாக்கி அவ் அமைப்பின் மூலம் வாழும் கலைப்பயிற்சியை செவ்வனே நடாத்தி வருகின்றார். ‘சன்’ தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ எனும் இனிய சொற்பொழிவுத் தொடர்மூலம் தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யம் பெற்று ‘சொல்வேந்தர்’ எனும் பட்டத்தையும் பெற்றவர். இவர் எழுதிய கட்டுரைகளும் ஆற்றிய சொற்பொழிவுகளும் பல நூல் வடிவத்தில் வெளிவந்துள்ளது அத்தகையதொரு சிறந்த சொற்பொழிவாளர் இந் நிகழ்வில் பங்கு கொண்டு சிந்தனைக்கு விருந்தாகப் பல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதையிட்டு பெரிதும் மன மகிழ்ச்சியடைகின்றேன், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.