ஒரு கிராமம் ஒரு வங்கி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் கிராமத்தின் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச சபையில் 16 பெப்பிரவரி 2021 அன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம் சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அத்துடன் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் இப் பிரதேசம் விவசாயத்தை மையமாகக் கொண்டது எனவும் அதில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகாவே நாங்கள் இந்த திட்டத்தை ஆரம்பித்தோம் எனவும் பிரதேச செயலாளர் ஊடாக சில ,டங்களில் பிரதான வங்கிகள் இல்லை என்பதை அறிந்துகொண்டேன் எனவும் , எங்களுடைய மேன்மை தங்கிய ஜனாதிபதியின் எண்ணக்கருவை செயற்படுத்துவதாக இருந்தால் வங்கிகள் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
வங்கியிலுள்ள பணம் விவசாயிகளை சென்றடைய வேண்டுமெனவும் வங்கிகளில் வெறுமனே சேமிப்பு கணக்குகளில் இருந்தால் இந் நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதனால் தான் இத்தகைய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வங்கிகள் இல்லாத இடங்களுக்கு அனைத்து வங்கிகளையும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்ததோடு நுண்கடன் நிறுவனங்களினால் மக்கள் படும் வேதனையைப்பற்றி கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் அந்த நுண்கடன் நிறுவனங்களுக்கு மக்கள் செல்வதை தடுத்து நிறுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இத் திட்டத்தில் கடன் வழங்குவது மட்டுமல்ல அவர்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் , வியாபார திட்டங்கள் , பயிற்சிநெறிகள் என்பன ஊக்குவிக்கப்படவேண்டும் எனவும் சுட்டிகாட்டினார்.