எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப் பண்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். கல்வியால் மாத்திரம் முழுமையடைந்து விட முடியாது. தலைமைத்துவப் பண்புமிருந்தால்தான் முழுமையடைய முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும், புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவின் அரங்க நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை காலை (18.10.2025) பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. அரங்க நிகழ்வுக்கு முன்னதாக 40 இற்கும் மேற்பட்ட பண்பாட்டு ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றிருந்தன.

அரங்க நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றியபோது தற்போதைய உங்களின் பிரதேச செயலாளர் விஜயகுமார், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளராகப் பணியாற்றினார். அவர் மிகச் சிறப்பாக வேலை செய்யக் கூடியவர். அவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலராக நியமிக்கப்பட்டபோது, நிச்சயம் இந்தப் பிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்தேன். அந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பிலிருந்து காணிப் பிரச்சினை தொடர்பில் எனக்கு அதிகளவான முறைப்பாடுகள் வந்தன. இப்போது முறைப்பாடுகள் வருவதில்லை. மக்களின் பிரச்சினையை தீர்க்கக் கூடிய ஒருவர் என்பதற்கும் அப்பால் மிகச் சிறப்பான தலைமைத்துவப் பண்பு அவரிடமிருக்கின்றது.

இன்றைய பண்பாட்டுப் பெருவிழாவையும் ஒரு பிரதேச செயலகப் பண்பாட்டுப் பெருவிழாவைப் போன்று இல்லாமல் மிகப் பிரமாண்டமாக நடத்துகின்றார். அவருக்கும், அவரோடு இணைந்து இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தக் காரணமான அனைவருக்கும் நன்றிகளைக் கூறுகின்றேன்.

எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். அதைப்போலத்தான் எங்கள் கலைகளும். அவை இன்று மருகிச் செல்கின்றன. நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் வாரத்துக்கு ஒரு கூத்து அரங்கேறும். இன்று அப்படியில்லை. இன்றைய சிறுவர்கள் – மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கான வாய்ப்புக்கள் குறைவு. அவர்களை கலை அல்லது விளையாட்டை நோக்கி ஈர்ப்பதன் – ஈடுபடுத்துவதன் ஊடாகவே அவர்களின் சிந்தனைச் சிதறல்களைத் தடுக்க முடியும். இளைய சமூகம் உயிர்கொல்லி போதைப்பொருள் உள்ளிட்டவற்றிலிருந்து மீட்க முடியும்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு கலாசார மண்டபம் அவசியம். நான் மாவட்டச் செயலராக இருந்த காலத்திலும் அதற்கு முயற்சித்திருந்தேன். அப்போது கைகூடவில்லை. விரைவில் கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் புதுவைக் கலைச்சுடர் விருது வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், புதுவையாள் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடமத்திய மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், புதுக்குடியிருப்பு சுகாதா மருத்துவ அதிகாரி, புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.