எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஜனாதிபதியின் வருகை உந்துசக்தியாக அமையும்!” – மானிப்பாய் ‘பொங்கல் சங்கமம்’ நிகழ்வில் ஆளுநர் பெருமிதம்

எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் தைப்பொங்கல் பண்டிகையில், நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நேரில் கலந்து கொள்வதானது, எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதோடு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவே அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் சங்கமம் – 2026’ நிகழ்வு, இன்று (15.01.2026) வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஆலயச் சூழலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல்களைப் பார்வையிட்டவாறு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டார். அதன் பின்னர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து பிரதான நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வரவேற்புரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது:

தைப்பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஈடுஇணையற்ற, தனித்துவமான ஒரு பண்டிகையாகும். இது வெறும் வழிபாட்டுடன் நில்லாது, எமது பண்பாடு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு திருநாளாகும். தமிழ் மக்களின் இந்தத் தனித்துவமான பண்டிகையை, எம்மோடு இணைந்து கொண்டாடுவதற்காக ஜனாதிபதி அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது, அவர் தமிழ் மக்களின் கலாசாரத்தின் மீது கொண்டுள்ள நன்மதிப்பையே காட்டுகின்றது. இதற்காக எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்றைய நிகழ்வானது வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது தனித்துவமான கலாசார விழுமியங்களைச் சுற்றுலாத்துறையுடன் இணைத்து, ‘கலாசாரச் சுற்றுலாவை’ வளர்த்தெடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

குறிப்பாக, எமது மாகாணத்தில் ‘ஆன்மீகச் சுற்றுலாவை’ ஊக்குவிப்பதற்கு நாம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன் ஒரு அங்கமாக, கடந்த ஆண்டில் சக்தி, முருகன், இராமாயணம் மற்றும் சிவன் ஆகிய ஆலய வழித்தடங்களை உள்ளடக்கிய நான்கு முக்கிய வழிகாட்டி நூல்களை நாம் வெளியிட்டிருந்தோம். இந்த முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தை இந்த ஆண்டில் நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

விசேடமாக, அயல் நாடான இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாவிகள் இதன் ஊடாக எமது மாகாணத்துக்கு வருகை தருவார்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம். எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் இத்தகைய தைப்பொங்கல் பண்டிகையில், நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நேரில் கலந்து கொள்வதானது, எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதோடு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவே நான் பார்க்கின்றேன்.

அதேவேளை, வடக்கு மாகாணம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். இங்கிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்குக் காலதாமதமின்றி உடனடியாகப் பதிலளித்துத் தீர்வுகளைப் பெற்றுத்தருவது, எமது நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றது, என்றார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்களின் தனித்துவமான கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, மாவட்டச் செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பொதுமக்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.