2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01.01.2025 அன்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதிமொழியெடுக்கும் நிகழ்வை வடக்கு மாகாண ஆளுநர் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் கொடியை வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மேலும் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஆளுநர் செயலக பணியாளர்கள் நேரலை ஊடக இணைந்திருந்தனர்.
அந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர் ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும். மக்களின் கோரிக்கைகளை அலைக்கழித்து, தட்டிக்கழிக்கவேண்டாம். அரச அலுவலகங்களுக்குச் சென்றால் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புங்கள். கடந்த காலங்களில் அரசியல் அழுத்தங்களால் – தலையீடுகளால் உங்களின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சில குழப்பங்கள் – தடங்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான நிலைமைகள் நிச்சயம் உங்களுக்கு ஏற்படாது. தற்போதைய அரசாங்கம் ஊழல், இலஞ்சம் அற்ற அரச சேவையையே எதிர்பார்க்கின்றது. அதை நாங்கள் வழங்கவேண்டும்.
அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடைய நாங்கள் ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாங்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானது, என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.





