எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்களிடத்தில் கல்வியிலும் இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் போட்டி தேவை. ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. நாங்களும் நன்றாக வரவேண்டும். மற்றவர்களும் நன்றாக வரவேண்டும். அப்போதுதான் எமது சமூகம் வளர்ச்சியடையும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை (06.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில், இந்த மாவட்டத்தில் மாவட்டச் செயலராக இறுதிப் போர்க் காலத்தில் பணியாற்றியிருக்கின்றேன். நீண்ட காலத்தின் பின்னர் இந்தப் பாடசாலையின் நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல்வாதிகள் சொல்வதைச் செய்யவேண்டும். நேர்மையாகச் செயற்பட முடியாது. அதனால்தான் அரச பணியிலிருந்து முற்கூட்டியே ஓய்வுபெறவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் எதையும் துணிந்து – நேர்மையாகச் செயற்பட முடியும் என்ற காரணத்தால் இந்தப் பதவியை பொறுப்பேற்றேன்.

எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். தலைமைத்துவப் பண்பு இன்று அருகிச் செல்வதனால்தான் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். உயர் பதவிகளில் இருப்பவர்கள் மக்களை பந்தாடுகின்றனர். விடயங்களைப் பொறுப்பெடுத்துச் செய்து கொடுப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் எதிர்காலத்தில் அந்தப் பதவிகளை அலங்கரிக்கப்போகும் நீங்கள் – மாணவர்கள் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கூறுகின்றேன்.

நாங்கள் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்யமுடியும். நாங்கள் மற்றையவர்களுக்கு நன்மை செய்தால் எங்களை நன்மை வந்து சேரும். இது இயற்கை நியதி. அதை மாணவர்கள் அனைவரும் மனதிலிருத்திக்கொள்ளவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் நேரிய சிந்தனையுடன் முயற்சித்தால் எதையும் அடையலாம். கல்வி அறிவோடு தலைமைத்துவப் பண்பையும் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் இந்த மாகாணத்தை வளப்படுத்த வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.