ஜுன் 27, 2024 அன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திலும் ஜுலை 05 மற்றும் 09 ஆம் திகதிகளில் முறையே கிளிநொச்சி, மன்னார் மாவட்டச் செயலகங்களிலும் இரண்டாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக மட்ட அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் உதவிச்செயலாளர் மற்றும்; மாவட்டச் செயலாளர்ஃமேலதிக மாவட்டச் செயலாளரின் இணைத் தலைமையிலும் கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றன.
இக் கூட்டங்களில் பங்கு பற்றிய மகளிர் குழுக்களின் பிரதிநிதிகள் நேர்த்தியான ஓர் ஒழுங்கு முறைப்படி பிரச்சனைகள் தொடர்பான முன்வைப்புக்களை மேற்கொண்டனர்.
இம் முறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உடன் எட்டுவதற்காக நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தீர்மானம் எடுக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள், ஊராட்சி முற்றங்களுடன் இணைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
மன்னார் மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு போதியதாக இல்லாமை தொடர்பில் அவர்களுடைய இணையத்தின் பிரதிநிதியால் கருத்தத் தெரிவிக்கப்பட்டமை பிரதான விடயங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.அத்துடன் பெண்களால் முன்வைக்கப்பட்ட ஊர் சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வாக ‘ கிராமத்தை நோக்கி’என்ற மாவட்ட செயலக குறைகேள் ஏற்பாடு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டத்தில் பொது அமைப்புக்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை மீள புதுப்பித்து செயற்பட நடவடிக்கை எடுக்குமாறு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு மேலதிக மாவட்டச் செலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.அத்துடன் தேராவில், உடையார்கட்டு பகுதியில் தற்காலிக பொலிஸ் நிலையங்களை அமைக்க வேண்டிய அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டதற்கு அது தொடர்பாக பரிசீலிப்பதாக வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரியப்படுத்தியிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட ஊராட்சி முற்றக் கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் தொழில் திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் வேண்டும் என பிரஸ்தாபிக்கப்பட்டது.