இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்திட்டமானது, வடமாகாணத்தின் மனித வள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. – ஆளுநர் புகழாரம்

டிஜிட்டல் மயமாக்கல், போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்புக்கு உயர் திறனும் தகுதியும் கொண்ட அரச சேவை அவசியமாகும். இத்தகைய தேசிய முன்னுரிமைகளைத் திறம்பட ஆதரிப்பதற்குத் தேவையான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நெறிமுறைத் தரங்களுடன் எமது அதிகாரிகளைத் தயார்படுத்துவதில் ஐடெக் (ITEC) புலமைப்பரிசில் செயற்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் (ITEC Day), யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (14.02.2026) மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்திட்டமானது, வடமாகாணத்தின் மனித வள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 40 அதிகாரிகளும், 2025ஆம் ஆண்டில் 45 அதிகாரிகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 3 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிகரிப்பானது, இப்புகழ்மிக்க செயற்திட்டத்தின் மீது எமது அதிகாரிகள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் பெறப்பட்ட பயிற்சியின் அனுபவமானது, எமது அதிகாரிகளின் பார்வையை விரிவுபடுத்தியுள்ளது. அவர்கள் புதிய நம்பிக்கை, உலகளாவிய பார்வை மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்கும் உறுதியுடன் நாடு திரும்புகின்றனர். வடமாகாணம் போன்ற சவால்களை எதிர்கொண்ட ஒரு பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்திக்கு இத்தகைய திறமையான அதிகாரிகள் மிக அவசியம்.

எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மேலதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கைத் தூண்களான பொருளாதார உறுதிப்படுத்தல், தேசிய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அடைவதற்கு, ஐடெக் போன்ற திட்டங்கள் எமது அதிகாரிகளைத் தயார்படுத்துகின்றன, என்றார்.

மனித வள மேம்பாட்டில் இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் ஆளுநர் தனது ஆழமான நன்றிகளையும் இதன்போது பதிவு செய்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெ.றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஐடெக் திட்டத்தின் ஊடாகப் பயிற்சிகளைப் பெற்ற முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.