உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (16.07.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை வினைத்திறனாகச் செலவு செய்யப் பணித்தார். அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

இதேவேளை, உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழான ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் திணைக்களத்தின் வருவாய் மற்றும் வேலைத்திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதில் இடர்களை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், சில இடங்களில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொண்ட ஒப்பந்தகாரர்களின் போதிய ஒத்துழைப்பு கிடைக்காமையால் திட்டமுன்னேற்றங்களில் பின்னடைவு நிலவுதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.