ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Primary Healthcare System Enhancing Project) அனலைதீவுக்கான மருத்துவப் படகு (Ambulance boat) அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கியின் பிரதிநிதிகள், மத்திய சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பிரதிநிதிகள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் ஆளுநரை இன்று வியாழக்கிழமை மதியம் (09.10.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் 2024 – 2028 ஆம் ஆண்டு வரையில் இலங்கையின் 9 மாகாணங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கு அமைவாக வடக்கு மாகாணத்துக்கு 2026ஆம் ஆண்டு 500 மில்லியன் ரூபாவும், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கு தலா 750 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும்போது காணப்பட்ட தேவைப்பாடுகளுக்கும் தற்போதைய தேவைப்பாடுகளுக்கும் உள்ள மாறுபடுகளை கருத்தில்கொண்டு அவற்றை தற்காலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான வடக்கு மாகாண சபையின் ஒத்துழைப்பை உலக வங்கிப் பிரதிநிதிகளும், திட்டத்தின் பிரதிநிதிகளும் கோரினர். அத்துடன் இந்தத் திட்டம் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்கே முதலாவதாக பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.