இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமாகிய 15 ஜனவரி 2020 அன்று யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
காலை பதினொன்று முப்பது மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கான துணைத்தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி,கலாசாரம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன் உள்ளிட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்திய அரசின் நிதி உதவியில் கட்டப்பட்ட கட்டடத்தை இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் ஆளுநர் கூட்டாக திரைநீக்கம் செய்து திறந்துவைத்தனர்.
தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் நடந்தேறிய நிகழ்ச்சியில் முக்கியஸ்தர்களின் உரைகளும் மாணவர்களின் சில கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது தொடர்நிலை இணைய வீடியோ வசதியூடாக மேலும் நான்கு பாடசாலைகளின் கட்டடத்திறப்புவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
இங்கு உரையாற்றிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இந்திய அரசின் நிதி உதவியில் வடக்குமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.
அவரைத்தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் இம்மகாணத்தை பொறுப்பேற்று தாம் கலந்துகொள்ளும் முதலாவது வைபவம் தனது சொந்த ஊரில் இடம்பெறுவதில் தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் தனது முந்திய பதவிக்காலங்களில் இந்திய அரசின் நெருக்கமான பங்களிப்புகள் தொடர்பிலும் நினைவுகூர்ந்தார். தனது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அதிகம் பயின்றது மட்டுமல்ல இக்கல்லூரியில் பணியாற்றியுள்ளதாகவும், கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் இப் பாடசாலை இன்று இந்திய அரசின் உதவியில் மேலும் வசதிகளைப் பெறுவது தொடர்பில் தான் மகிழ்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் யஇந்த கிராமத்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஜனாதிபதியுடன் பேசி செய்து தருவதாகவும் குறிப்பிட்டார்.