இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரண்டலற்ற முறையில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைப்பதற்கு வழியேற்படுத்துவதும் நோக்கில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் யாழ். மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (09.10.2025) நடைபெற்றது.

“GoVimart” என்னும் ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக, விவசாய உற்பத்திகளுக்கு நிலைபேறான தீர்வை நோக்கி நகர்த்துவதனுடன் விவசாயிகளை தொழில்முனைவோராக்கும் முயற்சியில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் நவீன தகவல் தொழில்நுட்ப பொறிமுறையில் அமைந்த தொகுதித் தொழில்நுட்ப (Block Chain) வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு அதைச் செயற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் இந்த அமைப்பு தனது சேவைகளை வடக்கு மாகாணத்துக்கும் விரிவாக்குகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஆகியனவற்றுடன் இணைந்து விவசாயிகள், விவசாய கம்பனிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் களப் பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

இது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலையைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியிலிருந்து விற்பனை வரையில் இடம்பெறுவதால் சிறப்பானதாக அமையும் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அடுத்த மாதமளவில் யாழ். மாவட்டத்தில் இரண்டு இடடங்களில் தமது கொள்வனவு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.