இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்யும் திரு. கணேசஐயர் சௌந்தரராஜன் அவர்களின் “யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்” மற்றும் திரு. நவரத்தினம் பரமேஸ்வரன் அவர்களின் “யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு வைபவமானது 2024.05.03 வெள்ளிக்கிழமை காலை 09.15 மணியளவில் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ம. பற்றிக் டிறஞ்சன் அவர்கள்; கலந்து சிறப்பித்திருந்தார். இவர்களுடன் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர், உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதிப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்களும், வட மாகாணக் கல்விப்பணிப்பாளர், யாழ் வலயக்கல்வி பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக பிரதம கணக்காளர்,  பண்பாட்டலுவல்கள் அலகின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், புத்தக விரும்பிகள் ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. தலைமையுரையினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். வெளியீட்டுரையினை கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.வே.ஆயகுலன் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து  நூல்களினை வெளியீடு செய்யும் வைபவம் இடம்பெற்றது. நூல்களின் முதற் பிரதி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் கரங்களால் நூலாசிரியர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டதுடன் வருகை தந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல் நூலுக்கான மதிப்பீட்டுரையினை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. தி.செல்வமனோகரன் அவர்களும், யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு நூலுக்கான மதிப்பீட்டுரையினை முன்னாள் துணைவேந்தர், வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் வழங்கினார்கள். யாழ்ப்பாண மாவட்டச்  செயலாளரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு நூலுக்கான வாழ்த்துச் செய்தியினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவர்களால் பிரதம விருந்தினர் உரையும் நிகழ்த்தப்பட்டது. நூலாசிரியர்களினால் நூல்களுக்கான ஏற்புரைகள் வழங்கப்பட்டதை அடுத்து கலாசார உத்தியோகத்தர் திரு.மாஅருள்சந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது காலை 11.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.