மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சன்னார் பள்ளமடு பகுதியில்; இராசவள்ளி மற்றும் கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு பயிர்களின் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பிரதேசத்தில் வழங்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டமை தொடர்பான வயல்விழா நிகழ்வு 23.09.2026 அன்று காலை 11.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியரான திருமதிA.N.D.குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி பயிர்ச்செய்கை திட்டமானது விவசாயப் போதனாசிரியரான S.S.A.X.லம்பேட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு விவசாயப் போதனாசிரியரான திருமதி திருமதி.A.N.D.குரூஸ் அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன், உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.மேர்வின் றொசான் றோச், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வானது இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயப் போதனாசிரியரினால் வரவேற்பு உரை இடம் பெற்றது. தொடர்ந்து, மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்கள் உரையாற்றுகையில் இப் பிரதேசவாழ் மக்கள் தொடர்ச்சியாக பூசணி மிளகாய் போன்ற பயிர்களை அதிகளவில் செய்து வருவதனால் சந்தைப்படுத்தலில் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். எனவே அப்பிரச்சினைக்குத் தீர்வாக இராசவள்ளி, கருணைக்கிழங்கு போன்ற பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டது எனவும் மேலும் இப் பிரதேச மண்ணாது கிழங்கு பயிரகளுக்கு மிகப் பொருத்தமானது ஆகையினால் இப் பயிர்ச்செய்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும்படி ஆலோசனை வழங்கினார். .அவரைத் தொடர்ந்து உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.மேர்வின் றொசான் றோச் உரையாற்றுகையில் இக்கிழங்குப் பயிரகளில் நார்ச்சத்து மிக அதிகமாகவும் போசனைச்சத்து மிக அதிகமாகவும் உள்ள பயிர் ஆகையால் இவற்றை சேதன முறையில் பயிர் செய்து அவற்றை உட்கொள்வதன் மூலம் தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியுமென தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாடவிதான உத்தியோகத்தர் திரு. A.J.G. மார்க் அவர்கள் உரையாற்றுகையில் இராசவள்ளி மற்றும் கருணைக்கிழங்கு ஆகிய பயிர்களுக்கான பயிர் இடைவெளி, பயிர்நடுகைக்குழி தயாரிப்பு முறை, நடுகைமுறை, பசளைப் பாவனை, பீடை முகாமைத்துவம் மற்றும் அறுவடை வரையில் அனைத்து விடயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாடவிதான உத்தியோகத்தர் K.மதனராஜ் குலாஸ் அவர்களினால் ஏனைய பயிர்களுடன் ஒப்பிடும் பொழுது இப்பயிரில் ஏற்படும் நோய்த்தாக்கம் குறைவென்பதால் சேதனமுறையில் பயிர்செய்து பயனைப் பெறுமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விவசாயி U.L.பிரதௌஸ் என்பவரினால் தான் முழுமையாக சேதன முறையிலேயே பயிரிட்டு வருவதாகவும் நடுகைக்குழியில் பெருமளவில் இலை மற்றும் சருகுகளையே பாவித்ததாகவும் மேலும் அறுவடையின் பின் விதைக் கிழங்குகளை இருவருக்கேனும் வழங்கி ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, விவசாயப் போதனாசிரியரினால் நன்றியுரை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வயல்விழா நிகழ்வு நிறைவுபெற்றது.





