வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறுபோக மற்றும் பெரும்போக பயிர்ச்செய்கைகள் குறித்தும், விவசாயிகளின் நீர் தேவைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். அத்துடன், குளத்தை நம்பி மேற்கொள்ளப்படும் நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார நிலைமைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் விளக்கமாகக் கேட்டறிந்து கொண்டார்.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது குளத்தின் பாதுகாப்பு குறித்தும், நீர் முகாமைத்துவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் அதிகாரிகளிடம் விலாவாரியாகக் கேட்டறிந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். இப்பிரச்சினைக்குத் தீர்வாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது, கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் இரணைமடு குளத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பிரதமருடன் இணைந்திருந்தனர்.




