எமது தாய்மொழிக்கு மேலதிகமாக இன்னொரு மொழியைக் கற்பதால் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை நாம் இலகுவாக்கிக் கொள்ள முடியும். சிங்கள மொழியைக் கற்றிருந்தால் இலங்கையின் எந்தப் பாகத்திலும் பணியாற்றக்கூடியதாக இருக்கும். இன்னொரு மொழியைக் கற்பதால் ஒருபோதும் நாம் குறைந்துவிடப்போவதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
ஹெல்தி லங்கா நிறுவனம் மற்றும் சூரிய நிறுவகம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று திங்கட்கிழமை காலை (29.09.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, ஈ.சரவணபவன் மற்றும் சுவிஸர்லாந்து தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்டச் செயலராக போர்க் காலத்தில் நான் பணியாற்றியபோது, கரு ஜயசூரிய அவர்கள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தார். அவரின் கீழ் பணியாற்றியதை நான் எப்போதும் பெருமையுடன் நினைவுகூர்வேன். மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியவர் அவர்.
எந்த அரசியல் கலப்புமில்லாமல் இன மற்றும் மத நல்லிணக்கத்துக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ் மக்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மக்களுக்கு தமிழ் மொழியும் அவரது நிறுவனத்தின் ஊடாக கற்பிக்கப்படுகின்றது. எமது நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழி இரண்டும் முக்கியம். எங்களது காலத்தில் சிங்களம் கற்பதற்கு வாய்ப்பு பெரிதாகக் கிடைக்கவில்லை. இதனால் பல வாய்ப்புக்களை நாங்கள் இழந்திருக்கின்றோம்.
ஆனால் இன்று எமது தமிழ் மக்களும் நன்மையடையவேண்டும் என்ற வகையில் கடந்த 10 ஆண்டுகளாக சூரிய நிறுவகம் பணியாற்றி வருகின்றது. பல இளையோர் இதன் ஊடாகப் பலன் பெற்றிருக்கின்றார்கள். இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இன்று இங்கு கற்று வெளியேறும் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகின்றேன், என்றார் ஆளுநர்.
சிங்களக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ஆளுநர் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் ஆளுநருக்கான நினைவுச் சின்னத்தை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கி கௌரவித்தார்.