இனிவரும் காலங்களில் வர்ண இரவு விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ – கௌரவ ஆளுநர் உறுதியளித்தார்.

விளையாட்டு வீரர்களின் நியாயமான மனக்குறைகளுக்குத் தீர்வு காணப்படும்; எனவும் இனித் தடங்கலின்றி வர்ண இரவு விருது வழங்கல் நடைபெறும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு – 2025’ நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று புதன்கிழமை (04.03.2026) மாலை கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு, தேசிய மட்டத்தில் தடம் பதித்த சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பணப்பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் முகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடனும், அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையுரையுடனும் ஆரம்பமான இந்த நிகழ்வில், தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் என மொத்தம் 95 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 60,000 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 30,000 ரூபாவும் பணப்பரிசுகளாக வழங்கப்பட்டன. குழுநிலை விளையாட்டுக்களில் முதலிடம் பெற்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 20,000 ரூபாவும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 15,000 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 10,000 ரூபாவும் வழங்கப்பட்டன. மேலும், சாதனை படைத்த வீரர்களை உருவாக்கிய பயிற்றுவிப்பாளர்களில், முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வீரர்களைப் பயிற்றுவித்தவர்களுக்கு 20,000, 15,000 மற்றும் 10,000 ரூபா பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

விருதுகளை வழங்கி வைத்து விசேட உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், கடந்த கால தவறுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியதுடன், விளையாட்டு வீரர்களுக்குரிய பல புதிய உத்தரவாதங்களையும் வழங்கினார்.

‘கடந்த 2019ஆம் ஆண்டின் பின்னர் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வர்ண இரவு நிகழ்வு நடைபெறாதமை வீரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதை நான் அறிவேன். இனிவரும் காலங்களில் எந்தவொரு தடங்கலுமின்றி இந்த விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ என ஆளுநர் உறுதியளித்தார்.

மாகாணத்தின் சாதனைகளைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிய அவர், ‘2024ஆம் ஆண்டு வரை அதிகபட்சமாக 5 தங்கப் பதக்கங்களையே நாம் பெற்றிருந்தோம். ஆனால், 2025ஆம் ஆண்டு உதைபந்து, குத்துச்சண்டை, மெய்வல்லுநர் என 8 தங்கப் பதக்கங்களை வென்று நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள். விசேடமாக, கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தொடர்ச்சியாகத் தேசிய சாதனையைத் தன்வசம் வைத்துள்ள புவிதரன் அவர்களின் அளப்பரிய சாதனை எமது மண்ணுக்கே மகுடம் சூட்டியுள்ளது,’ எனப் பாராட்டினார்.

விளையாட்டு வீரர்களின் குறைபாடுகள் மற்றும் ஆதங்கங்கள் குறித்து பேசிய ஆளுநர், ‘பரிசுத் தொகை முரண்பாடுகள், அதிகாரிகளின் கவனிப்புப் போதாமை, போக்குவரத்து மற்றும் சீருடை வசதிக் குறைபாடுகள் தொடர்பில் உங்களிடமிருந்து எழுந்த அத்தனை ஆரோக்கியமான விமர்சனங்களையும் நான் செவிமடுக்கின்றேன். தேசிய மட்டத்தில் சாதித்த ஒரு வீரர் அடுத்த முறை ஏன் போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தேடிப்பார்ப்பது எமது அதிகாரிகளின் கடமையாகும். உங்கள் வருத்தங்களில் நூற்றுக்கு நூறு வீதம் நியாயம் இருக்கிறது. இது தொடர்பில், நிகழ்வு முடிந்த கையோடு எனது தலைமையில், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு திறந்த கலந்துரையாடலை முன்னெடுத்துச் சரியான தீர்மானங்களை எடுப்போம். அத்துடன், வீரர்களுக்கான சத்துணவுக் கொடுப்பனவை உடனடியாக மீளாய்வு செய்து அதிகரிக்குமாறும் நான் ஏற்கனவே பணித்துள்ளேன்,’ எனத் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ‘இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்ல் அது ஒரு கௌரவமான தொழில்முறை. திறமையான வீரர்களைப் பாதுகாப்புத் தரப்பினரும் வர்த்தக நிறுவனங்களும் உள்வாங்குவதை நாம் காண்கின்றோம். அதேவேளை, அரசாங்கமும் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதில் அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. இந்த வாய்ப்புகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என வழிகாட்டினார்.

பெற்றோர்களுக்கான ஒரு முக்கிய கோரிக்கையையும் ஆளுநர் இதன்போது முன்வைத்தார். ‘இன்று இளையவர்கள் சமூகப் பிறழ்வுகளுக்கு உள்ளாகுவதற்கு, அவர்களுக்கு விளையாடுவதற்கான போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் ஒரு பிரதான காரணமாகும். தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது. ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பையும், சமூக சவால்களை எதிர்கொள்ளும் மனத்திடத்தையும் விளையாட்டுத்துறையாலேயே வழங்க முடியும். எனவே, ‘படிப்பு… படிப்பு…’ என்று பிள்ளைகளை மன அழுத்தத்துக்கு உள்ளாக்காமல், அந்த அழுத்தங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் ‘விளையாட்டை’ நோக்கியும் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள்,’ என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், வடக்கு மாகாண உள்ளகக் கணக்காய்வாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், விளையாட்டுத்துறை அலுவலர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.