இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு

யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன்,உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து பயன் பெற்றனர்.

தொட்டிலடி, சங்கானை எனும் முகவரியினை சேர்ந்த திரு.பொ.அமிர்தலிங்கம் எனும் விவசாயி ரங்கூன் இன இஞ்சியினை அரை ஏக்கர் விஸ்தீரணத்தில் வெற்றிகரமாக செய்கை பண்ணியிருந்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் இஞ்சிக்கு தற்போதய கொவிட் 19 சூழ் நிலையில் நல்ல கேள்வி எழுந்துள்ளது. எனவே சந்தை வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் அதிகளவு வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும். விரைவான மத்திய கால உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மேலதிக உணவுப் பயிர்களை செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விதைகளை வழங்குவதற்கு சலுகைகளை வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிற்கு விதைகளிற்கான மானியம் வழங்கியதன் மூலம் பயிர்ச் செய்கை விஸ்தீரணமானது கடந்த ஆண்டில் அதிகரித்தது. உற்பத்திகளை பெறுமதிசேர் நடவடிக்கைகளிற்கு உட்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார.;

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மத்திய விவசாய அமைச்சின் உதவியுடன் பல விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விவசாயிகள் அதிக வருமானத்தை பெறக்கூடிய பயிர்ச்செய்கைகைளை மேற்கொள்கின்றார்கள். மண்ணுக்கு பொருத்தமான பயிர்களை இனங்கண்டு பயிரிடுவதுடன் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நவீன தொழினுட்பங்கள் பெற்று சிறப்பான விளைச்சலைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

இந் நிகழ்வினை தொல்புரம் விவசாயப்போதனாசிரியர் திரு.க.நிரோஜன் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்.