பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நேரடி பயணமொன்றை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
ஆளுநர் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய், ஆத்திமோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கள்ளியடி அ.த.க. பாடசாலைக்கு முதலில் பயணம் செய்தார். மாந்தை மேற்கு பிரதேச செயலர் திரு. அரவிந்தராஜ் அவர்களும் இதில் இணைந்திருந்தார்.
வெள்ளத்தின் போது வீட்டின் கூரைகள் மற்றும் மரங்களில் தங்கியிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்ட மக்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். இதன்போது, கூராய் குளத்துக்கான நீர்ப்பாசன வாய்க்கால் திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இந்த இடருக்குக் காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டினர். எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
மேலும், வெள்ளத்தில் தமது காணி ஆவணங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டனர். இதற்குப் பதிலளித்த ஆளுநர், அலுவலகப் பிரதிகளைக் கொண்டு எதிர்காலத்தில் மூல ஆவணங்களை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
வெள்ளம் வடிந்தாலும் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கான ‘கட்டாடுவயல் – இராமயன்குளம்’ வீதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து அவ்வீதியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஆளுநர், காப்பெட் வீதியின் பல இடங்கள் வெள்ளத்தால் முற்றாகப் பெயர்க்கப்பட்டுள்ளதை அவதானித்தார்.
உடனடியாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளருடன் தொடர்புகொண்ட ஆளுநர், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குப் போக்குவரத்து வசதி மிக அவசியம் என்பதால், தற்காலிகமாக அவ்வீதியைச் செப்பனிட்டு மக்களின் பாவனைக்கு வழங்குமாறு பணித்தார்.
சிலாவத்துறையிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்டு, மாற்றுடை ஏதுமின்றி மன்னார் மாவட்ட மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களையும் ஆளுநர் சந்தித்தார். மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை அவர்களுக்கு ஆளுநர் வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்:
உள்ளூராட்சி மன்றங்களின் கோரிக்கைக்கு அமைவாகத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுக்கிணறுகளைத் துப்புரவு செய்தல், வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளைச் சுத்தம் செய்தல் மற்றும் உயிரிழந்த கால்நடைகளைத் தாமதமின்றி அடக்கம் செய்தல் போன்ற பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
உயிரிழந்த கால்நடைகள் அழுகி வெடிக்கும் நிலை காணப்படுவதால், அது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும். எனவே, இப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பணியாளர்கள் அல்லது உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், உடனடியாக ஒப்பந்த அடிப்படையில் அவற்றைப் பெற்றுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகச் செப்பனிடவும், பின்னர் நிரந்தரமாகப் புனரமைப்பதற்கான மதிப்பீடுகளைத் தயாரித்து வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
முள்ளிமோட்டை கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சூரியகட்டைக்காடு சென். செபஸ்ரியன் றோ.த.க. பாடசாலைக்கும் ஆளுநர் பயணம் செய்தார். படகுகள் மூலம் மீட்கப்பட்ட இம்மக்கள், தமது வீடுகள் மற்றும் வாழ்வாதாரமான கால்நடைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்துள்ளதால், தமது எதிர்காலம் குறித்து அச்சம் வெளியிட்டனர்.
தொடர்ந்து, மல்வத்துஓயா பெருக்கெடுப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நானாட்டான் – முத்தரிப்பு வீதியை ஆளுநர் பார்வையிட்டார். வெள்ளம் வடியாத நிலையில், உழவு இயந்திரம் மூலம் சென்று நிலைமைகளை ஆளுநர், மாவட்டச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். அருகம்குண்டு பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை உடனடியாக அகற்றிப் போக்குவரத்தைச் சீர் செய்யுமாறு அவர் பணித்தார்.
நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை வீதி ஊடாகப் பயணித்துச் சேதங்களைப் பார்வையிட்ட ஆளுநர், மக்களையும் சந்தித்தார். உரிய இடத்தில் பாலம் அமைக்கப்படாததே வெள்ளப் பாதிப்புக்குக் காரணம் என மக்கள் சுட்டிக்காட்டினர். மேலும், குடிநீர் வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு மாவட்டச் செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இறுதியாக, நானாட்டான் பிரதேச செயலகத்தில் மத்திய சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்), மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் மன்னார் மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடினார். மின்சாரம் மற்றும் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட்டு வருவதாக இதன்போது மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுமாறு அனைத்து அதிகாரிகளையும் ஆளுநர் வலியுறுத்தினார்.











