ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 17 பெப்பிரவரி 2019 மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.

இந்திய இல்லத்திற்கு வருகைதந்த ஆளுநர் அவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் உற்சாகமாக வரவேற்றார். இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ஆளுநர் நாக மரக்கன்று ஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் வழங்கினார்.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆளுநர்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் சார்பிலும் அரசின் சார்பிலும் வட மாகாண மக்கள் சார்பிலும் தனது நன்றியினை தெரிவித்தார்.