வடக்கு மாகாணசபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.08.2025) இடம்பெற்றது.
பதில் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார். தொடர்ந்து பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அலோகபண்டார கலந்துரையாடலின் நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் உதவிப் பணிப்பாளரால், மாகாணத்தின் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டு 7,306 மில்லியன் ரூபா மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 1,613 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாகாணத்தின் ஆளணித் தேவை தொடர்பாக பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும், பயிற்சியும் செ.பிரணவநாதன் தெரிவித்தார். இதன்போது, 41,205 ஆளணி அனுமதிக்கப்பட்டபோதும் 32,807 பேரே நிரப்பப்பட்டுள்ளனர் என்றும் இன்னமும் 8,398 வெற்றிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதில் மக்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள சேவைகளை முன்னெடுக்கும் ஆளணிகளே பெருமளவு நிரப்பப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். இதனால் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதிலும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆளணியில் 87 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளபோதும் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ அலகுகளை நிர்வகிப்பதற்கு 1,296 தாதியர்களுக்கான ஆளணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. திட்டமிடல் பிரிவில் 60 சதவீதம் வெற்றிடம் காணப்படுகின்றது என்றும் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கும் வெற்றிடங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை அமைச்சரவையால் 518 ஆளணிகளை உள்ளீர்ப்பதற்கான அனுமதி அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றது என்றும் அதற்கமைவான உள்ளீர்ப்பு பொறிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அரசாங்கத்தின் கொள்கையான எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல்) செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு ஏதுவாக தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் தேவை என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக உள்ள 107 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு ஏதுவாக விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உள்ளூராட்சிமன்றங்களின் வியாபார வரி உள்ளடங்கலாக பல்வேறு வரிகள் தொடர்பான ஏற்பாடுகள் மிகப் பழமை வாய்ந்தனவாக உள்ளன என்றும் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் உள்ளூராட்சிமன்றங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார். மேலும், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க வேண்டும் என்றபோதும் வடக்கில் சில பிரதேச செயலகங்களில் அவ்வாறான நிலைமை காணப்படவில்லை என்றும், அதற்கு அமைவாக புதிய பிரதேச சபைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அத்துடன் சில உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் உள்ளூராட்சிமன்றங்கள் தமது வருமானத்தில் சம்பளம் வழங்கவேண்டும் என்ற நிலையில், சில சபைகளுக்கு அது சிரமமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டடங்கள், வாகனங்கள், கனரக வாகனங்கள் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள நீர்பாசனக் குளங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய பிரதேச செயலர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகவும், பிரதேச செயலர்களுக்கு அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதி அமைச்சர் ருவான் செனரத் கருத்துத் தெரிவிக்கையில், பல்வேறு பிரச்சினைகள் இந்த மாகாணத்தில் காணப்படுகின்றன என்பதை உணர முடிகின்றது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உங்கள் மக்களுக்காக நீங்கள் சிறப்பான சேவையை செய்து வருகின்றீர்கள் என்பதற்காகப் பாராட்டுகின்றேன். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். நீங்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளை இனம்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம், என்றார்.
ஆளுநர் தனது உரையில், எமது பிரச்சினைகளை நேரடியாக வந்து கேட்டறிந்தமைக்கு கௌரவ அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் எமது மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டமைக்கும் எதிர்காலத்தில் அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார். நாம் இந்த நிதி ஒதுக்கீட்டை ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வதற்கு ஏதுவாக ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதுடன் கோரிய புதிய ஆளணி உருவாக்கங்களையும் மேற்கொண்டு தருமாறும் ஆளுநர் கோரினார். இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் அபிவிருத்திகளைச் செய்ய முடியும் என நம்புகின்றோம். அதேநேரம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தொடரும் நிலையில் அதற்கான பொறிமுறை ஒன்றை அவர்கள் கோருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதனை விரைந்து ஏற்படுத்துமாறும் குறிப்பிட்டார்.
அத்துடன் வேலணையிலுள்ள அமைச்சின் சுற்றுலா விடுதி பயன்படுத்தப்படாத நிலையில் அமைச்சு அதை பயன்படுத்த விரும்பவில்லையாயின் மாகாண சபையிடம் கையளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் இ.சந்திரசேகர், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். அத்துடன் சில விடயங்களை துறைசார் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தி அது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் அறியத் தருமாறும் அந்த விடயங்களை வேகமாக நிறைவேற்றித் தருவோம் எனவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன பதிலளித்தார்.
அனைத்துறைகளிலும் உள்ள ஆளணி வெற்றிடங்களையும் படிப்படியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையாக அவை நிரப்பப்படும். அதேபோல திணைக்களங்களுக்குத் தேவையான வாகனங்களும் வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மனிதவளம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாமல் அபிவிருத்தியை நோக்கி நகர்வது கடினம். அதேநேரம், இந்த மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரித்தல், வறுமை தணிப்பு, வேலையின்மையை இல்லாமல் ஆக்குதல், ஒட்டுமொத்த வடக்கு மக்களின் சனத்தொகையின் நான்கில் ஒரு பங்காக உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற விடயங்களுக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
வடக்கு மாகாண சபையால் கோரப்படும் நிதி 2026ஆம் ஆண்டுக்கு விடுவிக்கப்படும். கடந்த காலத்தில் இந்த மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம். இங்கே ஏனைய மத்திய அமைச்சுக்களுடன் தொடர்புடைய சில தேவைப்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்பில் தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக கலந்துரையாடுவதற்கு ஏதுவான ஒழுங்குகள் செய்துதரப்படும். அதேபோல நிரந்தர நியமனத்துக்காக விசேட அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு ஒழுங்கு செய்யப்படும்.
புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றீர்கள். சபைகளின் வருமானத்தில் 20 சதவீதம் சம்பளமாக வழங்க வேண்டிய நிலையில் புதிதாக உருவாக்கப்படும் சபைகளால் அது முடியுமா? அந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அதேநேரம் சபைகளின் தரங்களை உயர்த்துவது, புதிய கட்டடங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடன் சமர்ப்பியுங்கள், என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா ஆகியோரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.