வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய அறநெறி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சித்திட்டமானது 2023.01.30 திங்கட்கிழமை காலை 8.30மணி தொடக்கம் பி.ப 4.30மணி வரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறையானது இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் ஆன்மீகம், பண்பு, அறம், ஒழுக்கம் போன்றவை எமது வாழ்வில் அவசியம் என்பதுடன் கௌரவ ஆளுநரின் வழிகாட்டல்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டு தனது தலைமையுரையினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களினால் யோகாசனப் பயிற்சியும் அதன் முக்கியத்துவமும் பற்றி கற்றுக்கொடுக்கப்பட்டது. இலக்கியங்கள் காட்டும் அறம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.த.அஜந்தகுமார் அவர்கள் விளக்கவுரை வழங்கியிருந்தார். தொடர்ந்து தொழில்நுட்பக்கல்லூரி வருகைதரு விரிவுரையாளர் திரு.சி.விக்கினேஸ்வரன் அவர்களால் திருமுறையும் நாம சங்கீர்த்தனமும் எனும் தலைப்பில் பண்ணுடன் திருமுறைகள் பாடுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் யாழ்பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடம்இ சைவசித்தாந்தம் துறையின் வருகைதரு விரிவூரையாளர் சிவஸ்ரீ.குமாரசுவாமிநாதசர்மா அவர்களினால் “வழிபாடுகளில் தத்துவம்” எனும் தலைப்பில் தத்துவக்கருத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.. அதன்பின் ஆன்மீகப் பண்பும் தலைமைத்துவமும் தொடர்பான “ஆன்மீகச்சுடர்” கருத்துக்கள் ரிஷிதொண்டன் சுவாமிகளால் அறநெறி ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டன. இறுதியாக நன்றியுரையுடன் பிற்பகல் 4.30மணியளவில் இப்பயிற்சிப்பட்டறையானது இனிதே நிறைவுபெற்றது.