அனுராதபுர மாவட்டத்திற்கான களவிஜயம் – பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை

உலக வங்கியின் அனுசரணையுடன் அனுராதபுர மாவட்டத்தில் நச்சுவாடாகுளம் என்ற கிராமத்தில் அமுலாக்கப்படும் பூச்சிகள் உட்புகாத வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையினைப் பார்வையிடுவதற்கான வெளிக்களவிஜயம் ஒன்று 14.03.2019 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இக் களவிஜயமானது விவசாயத் துறையின் நவீன மயமாக்கல் திட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதி மாகாண திட்டப்பணிப்பாளர் க.பத்மநாதன் மற்றும் விவசாய நிபுணர் விஜிதரன், யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் மற்றும் 04 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள 4 விவசாயிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்டது.

சிறந்த விவசாய நடைமுறைகளை (Good Agriculture Practice) விவசாயிகள் கைக்கொள்வதனை ஊக்குவித்து தரம்மிக்க மிளகாய் மற்றும் பாகல் உற்பத்தியைப் பெற்றுக் கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

திட்டத்தின் கீழ் 10 விவசாயிகள் பாகல் செய்கைக்கும் 10 விவசாயிகள் மிளகாய்ச் செய்கைக்குமாக மொத்தமாக 20 இளம் விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இப் பயனாளிகளில் ஒவ்வொருவருக்கும் ½ ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைபண்ணுவதற்காக பூச்சிகள் உட்புகாத வலை (Insect Proof Net) மற்றும் சொட்டு நீர்ப்பாசனத் தொகுதி என்பன மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

Pali F1 என்ற பாகல் இனம் நடுகை செய்யப்பட்டுள்ளது. இச் செய்கையில் எதிர்நோக்கப்படும் இலைகள் மஞ்சளாதல் மற்றும் பழஈக்களின் தாக்கம் என்பனவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலைகள் மஞ்சளாதலுக்குரிய நோய்க் காரணியான வைரசைக் காவும் வெண் ஈக்கள் மற்றும் பழ ஈக்கள் உட்செல்வதைத் தடுப்பதற்காக 40 mesh, 10’ உயரமுள்ள பூச்சிகள் உட்புகா வலை பயன்படுத்தப்படுகின்றது.

நீர் மற்றும் உரம் சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியூடாக வழங்கப்படுகின்றது. 1 வரிசையில் 60 பாகல் கொடிகள் நடப்பட்டுள்ளன. 1 கொடியின் நிலையத்திற்கு 2 சொட்டு வெளியேற்றிகள் எனும் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 2 லீற்றர் நீரை வெளியேற்றும் சொட்டு வெளியேற்றிகள் ஊடாக நாளொன்றிற்கு 1-1½ மணித்தியாலம் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகின்றது.

போசணை முகாமைத்துவத்திற்காக ½ ஏக்கர் நிலப்பரப்பிற்கு 2.5 கிலோ N, P, K கலவையுடன் 0.5 கிலோ அல்பேட் கரைசல் கலக்கப்பட்டு சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 20 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு வழங்கப்படுகின்றது. பாகல் செய்கை தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளது.

மிளகாய்ச் செய்கையில் இவைச் சுருளை ஏற்படுத்தும் பனிப்பூச்சி மற்றும் சிற்றுண்ணி வைரசைக் காவும் வெண் ஈக்கள் போன்ற பீடைகள் உட்செல்வதைத் தடுப்பதற்காக 40 mesh, 10’ உயரமுள்ள பூச்சிகள் உட்புகா வலை யன்படுத்தப்படுகின்றது.

வினைத்திறனான நீர் மற்றும் போசணை முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் நோக்குடன் பொலித்தீன் மூடுபடையிடப்பட்டு சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு 2½’x 1’ பரிமாணமுள்ள மேடைகள் அமைக்கப்பட்டு மேடையின் மீது இரு வரிசைகளில் சொட்டுநீர்ப்பாசனம் பொருத்தப்பட்டு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கையில் பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் செய்கையை மேற்கொள்ளும் போது விவசாய இரசாயனங்களின் பாவனையைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பது தெளிவாகின்றது.

சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வலையின் கீழ் பாகல் செய்கை – முன்மாதிரித்துண்டம்

சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் பாகல் செய்கை – கட்டுப்பாட்டுத்துண்டம்

பாகல் செய்கை – முன்மாதிரித்துண்டம், கட்டுப்பாட்டுத்துண்டம்

சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வலையின் கீழ் மிளகாய்ச் செய்கை