கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையை சீர்குலையும். நாம் எமது சுற்றுச்சூழல் நிலைத்து நீடித்து நிற்கக்கூடிய வகையில் செயலாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
சினமன்குளோபல் நிறுவனமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு ‘நோர்த் ஹேட் ஹொட்டலில்’ இன்று சனிக்கிழமை காலை (26.07.2025) நடைபெற்றது.
இங்கு தொடக்கவுரையாற்றிய ஆளுநர்,
நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடலட்டைகளை பிடிக்கின்றார்கள் என்று பலர் முறையிட்டார்கள். அப்போது கடற்படையினர் ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை ஏன் எங்கள் கடற்றொழிலாளர்களால் செய்ய முடியாது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இது முற்றிலுமாக மாறிவிட்டது. ஆனாலும் இப்போதும் வறியவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட முடியாத துரதிஷ்டம் நீடிக்கின்றது.
கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு பின்னடிக்கும் நிலைமையே காணப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. இன்று அந்த நிலைமை மாறியிருக்கின்றது. ஆனாலும் இங்கு ஏற்கனவே உள்ள உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் போதாதது. அதை மாற்றியமைக்க நாங்கள் முயற்சிக்கின்றோம்.
கடந்த சில ஆண்டுகளில், இலங்கையின் ஏற்றுமதிகள் – குறிப்பாக வடக்கிலிருந்தான கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. ஆனால் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, நிலைத்தன்மையை புறக்கணித்தால், நாம் உருவாக்க முயற்சிக்கும் தொழில்துறையையே சேதப்படுத்துவதாக அமைந்துவிடும்.
இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கவனிக்கவேண்டும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடலட்டைக்கும், புலிகள் மற்றும் யானைகளைப் போலவே அதே அளவிலான பாதுகாப்பை வழங்குகின்றன. அங்கு கடலட்டைகளை அறுவடை செய்ய முடியாது.
இதேநேரம், துரதிஷ்டவசமாக சில சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை கடல் பகுதிகளுக்குள், குறிப்பாக வடக்கிலும் உருவாகியுள்ளன. எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. சட்டவிரோதமான வர்த்தகத்துக்கான மையப்புள்ளியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. எமது வளங்கள், எமது சமூகம் தொடர்பில் சர்வதேசத்திலுள்ள நற்பெயரைக் கெடுக்கக் கூடாது.
நாங்கள் ஏற்கனவே சரியான தடத்திலிருந்தாலும், இந்தத் தொழிலை நாங்கள் முறையாக ஒழுங்குபடுத்தவில்லை என்றால், கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால்தான் குறைந்தபட்ச சட்ட ஏற்பாட்டு அளவுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாம் அதிகமாக கடலட்டையை அறுவடை செய்தால் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதித்தால், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையை சீர்குலைப்போம். அதனைக் கட்டுப்படுத்த சில முன்மொழிவுகளை நான் இங்கு முன்வைக்கின்றேன்.
எமது கடலோரப் பகுதியின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட கடல் சரணாலயங்களாகக் குறிக்கப்பட வேண்டும். அங்கு, மீன்பிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் அனுமதிக்கப்படக்கூடாது. இந்தப் பகுதிகள் கடல் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்க உதவும். அவை சூழல்நேயச் சுற்றுலா மற்றும் நீர்வாழ் சுற்றுலாவுக்கான அழகான மையங்களாகவும் மாறலாம். இது உள்றுர் சமூகங்களுக்கு புதிய வருமான ஆதாரங்களைக் கொண்டு வரலாம்.
சரியான சுற்றுச்சூழல் தரவுகளைப் பயன்படுத்தி, நிலையான கடலட்டைப் பண்ணை எங்கு நடக்கலாம், எங்கு தவிர்க்கப்பட வேண்டும் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும்.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், கடற்படை, சுங்கம் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு சட்டவிரோத கடலட்டை பண்ணை மற்றும் வர்த்தகத்தை நிறுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதேநேரம், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் தொழில் தலைவர்களின் ஆதரவுடன் வடக்கில் ஒரு கடல் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிலையம் உருவாக்கப்பட வேண்டும்.
இதனூடாக, கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலைய அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நோயைக் குறைத்தல், சிறந்த தீவனம் மற்றும் அதிக மதிப்புள்ள தயாரிப்புகளை உருவாக்குதல், பண்ணைகளை நவீனமயமாக்குவதற்கும், கண்டறியும் தன்மையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துதல், நிலையான மீன்வளர்ப்பு குறித்த தொழில் பயிற்சி மையங்களைத் தொடங்குதல், விவசாயிகளுக்கு தொடர்ச்சியான கற்றலை வழங்குதல் என்பனவற்றை முன்னெடுக்கலாம்.
இதற்கு மேலதிகமாக, எமது கடலட்டை பண்ணையாளர்கள் நேரடியாக வெளிநாட்டுச் சந்தைகளில் விற்கக்கூடிய வகையில் சர்வதேச சான்றிதழ்களை அறிமுகப்படுத்த வேண்டும். எமது மாகாணத்திலிருந்து கடலட்டைகளை ஏற்றுமதி செய்வது மாத்திரமல்ல, எமது மாகாணத்துக்கான கடலட்டைகளை தனியான ‘பிராண்டை’ உருவாக்கவேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.