வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய வட மாகாண நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2022.04.27 (புதன்கிழமை) மாலை 05.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி.அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் திரு.ம.பிரதீப், மடு பிரதேச செயலாளர் திரு.கி.பி.நிஜாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன் ஏனைய திணைக்களத் தலைவர்கள், மன்னார் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஜனாப் யூ.அலியார் அவர்களின் வரவேற்புரையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. நோக்கவுரையினை வடமாகாண கலாச்சார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக பிரதம விருந்தினர் அவர்களின் உரையுடன் மூர் வீதி பள்ளிவாசல் பிரதான மௌலவி ஜனாப் ளு.யு.அசீம் அவர்களினால் “நோன்பின் மாண்புகள்” பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது. பாங்கும் துவாவும் ஓதப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.