வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினுடைய 102வது வருட பொங்கல் விழாவுடன் இணைந்து நடாத்திய வடமாகாண தைப்பொங்கல் விழா 16.01.2022 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் பிரதிநிதியான அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.சி.சுரேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராம் மகேஷ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு. என். திருலிங்கநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், கரைச்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. மாதுகி சஜி அவர்கள் மற்றும் இரணைமடுக்குள கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திரு.வி.நடராசா ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து விழாவைச் சிறப்பித்திருந்தார்கள்

இவ்விழாவில் புதிர் எடுத்தல், ஆலய வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் விருந்தினர்களால் பொங்கல் பானை ஏற்றப்பட்டதுடன் மங்கள இசைமுழங்க விருந்தினர்கள் நிகழ்வுநடைபெறும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். கமக்கார அமைப்புக்களின் சம்மேளனச் செயலாளரின் வரவேற்புரை மற்றும் ஜானு அரங்க ஆற்றுகையகத்தின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. விழா நோக்கவுரையினை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் ஆற்றினார். மேலதிக அரசாங்க அதிபர் அவர்களின் சிறப்புரையும், யாழ். இந்திய பதில் துணைத் தூதுவர் அவர்களின் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது. மன்றங்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன. பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பிரதம விருந்தினர் பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து நினைவுப்பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சினதும் மற்றும் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், அப்பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.