யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்- ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07 செப்ரெம்பர் 2019 அன்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் வேந்தர் மற்றும் துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் பட்டமளிப்பு விழா நடத்தமுடியாமல் இருப்பதாகவும் இதனால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடுவதற்கும் உயர்படிப்புக்களை மேற்கொள்வதற்கும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதனால் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தி சிறந்ததொரு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சுகாதார வசதிக்காக நிரந்தர வைத்தியரோ தாதியினரோ இல்லாமையினால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதனால் இது தொடர்பிலும் தீர்வொன்றினை பெற்றுத்தருமாறும் மாணவர்கள் மேலும் கோரிக்கை விடுத்ததுடன் இராமநாதன் நுண்கலைக் பீடப் பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் ஏற்படுவதால் மாணவர்கள் பாதிப்படைவதால் அதற்கான தீர்வினையுவும் வீதி அதிகாரசபை மற்றும் பொலிசாருடன் இணைந்து ஏற்படுத்தி தருமாறும் கோரினர்.

அத்துடன் யாழ் மக்களுக்கு நீர் வழங்கும் முகமாக அண்மையில் ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட வடமராட்சி களப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கு ஆளுநர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வரவேற்ற மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வடக்கின் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுநர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வேந்தர் மற்றும் துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பிலும் பட்டமளிப்பு விழா காலதாமதம் தொடர்பிலும் கௌரவ ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து கூடிய விரைவில் சரியான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார். அத்தோடு ராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வேகத்தடைகளையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடனும் வடமாகாண வீதிப் பாதுகாப்பு சபையுடனும் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் வைத்தியர் பிரச்சினை முழு வடமாகாணத்துக்கும் காணப்படுவதால் இதுதொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியுமென குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அதுவரையில் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்கி அவர்களை இதில் ஈடுபடுத்த முடியுமென்றும் தெரிவித்த ஆளுநர் யாழ் பல்கலைக்கழகத்தில் புத்தக விற்பனைக் கூடமொன்றையும் உருவாக்கி நடத்துமாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு நிதியுதவி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.