மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம் 

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர்வளங்கள், கொவிட்-19 தொற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளின்  தற்போதைய நிலை, பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், மேச்சல் தரைகளுக்கு தகுதியான இடங்களை இனங்கண்டு பச்சைப்புல் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் கால்நடைகளுக்கான உணவு தடையின்றி கிடைப்பதுடன் புதிய தொழில் வாய்புகள் உருவாக வழிவகுக்கும் என தெரிவித்தார்.

மேலும் முறையான திட்டங்களுக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததுடன் தேவையற்ற எந்த கட்டடங்களையும் அமைக்க வேண்டாம் எனவும் மிக முக்கியமாக பாடசாலைகளுக்கு தேவையான மலசலகூடம் மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை  வழங்கவும் வலியுறுத்தினார்.

அத்துடன் தற்போதைய கொவிட்-19 நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடவும், வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வியாபாரத்தை பரவலாக்கி வீதியோரங்களில் அல்லது நடமாடும் விற்பனையில் ஈடுபட அனுமதி அளிக்கபடுவதாகவும் தெரிவித்தார்.

Gambling Blog

கல்வித்துறை தொடர்பில் ஆசிரியர் ஆளணிப் பற்றாக்குறை, கட்டட தேவைப்பாடுகள் ஆராயப்பட்டது. இதில் கிளிநொச்சி கல்விவலயத்தை இரண்டு வலயங்களாக பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதாவது கரைச்சி  பூநகரி பிரதேசத்தை உள்ளடக்கி ஒரு வலயமாகவும் கண்டாவளை பளை பிரதேசத்தை உள்ளடக்கி மற்றைய வலயமாகவும் பிரிக்க அனைவரின் கருத்துகளுக்கும் அமைய தீர்மானிக்கபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.