மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும் தெரியப்படுத்தும் நோக்குடன் முகமாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு ளு.கு.ஊ. உதயசந்திரன் தலைமையில் 26.03.2024 அன்று வயல்விழா மற்றும் பயிர்சிகிச்சை முகாம் என்பன இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மதத்தலைவர்கள் கமக்கார அமைப்பு தலைவர்கள் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட பாட விடய உத்தியோகத்தர் திருமதி. ஆல்ஜுன் குரூஸ் கருத்து தெரிவிக்கையில் மஞ்சள் செய்கையின் விவசாய தொழில்நுட்பங்கள் நடுகை விதைதண்டு கிழங்கை தெரிவு செய்யும் முறை பயிர் இடைவெளி நீர்ப்பாசனம் பொருத்தமான அறுவடை பருவம் போன்ற விடயங்களையும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பங்கள் குடிசை தொழில் முயற்சியாக மஞ்சள் தூள் தயாரிப்பு போன்றவற்றையும் தெளிவுபடுத்தினார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு. ளு.கு.ஊ. உதயசந்திரன் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் புதிய பயிர்களையும் பயிர்செய்கை முறைகளையும் அறிமுகப்படுத்தும் போது பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள விவசாயிகளே அவற்றை முதலில் முயற்சித்து பார்ப்பாவர்களாக காணப்படுகின்றார்கள் அந்த வகையில் மஞ்சள் செய்கையும் தற்சமயம் இங்கு வெற்றியளித்துள்ளது. இதனை வெற்றி விழாவாக மாற்றிய விவசாயி மற்றும் பகுதி விவசாய போதனாசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட மதத்தலைவர்கள் இவ்வாறான பயிர்செய்கையில் ஈடுபடுவது கிராமத்திற்கும் விவசாயிகளிற்கும் நன்மை அளிப்பதோடு இவ்வாறான பயிர் உற்பத்திகளில் தொடர்ந்து கிராம மக்கள் ஈடுபட வேண்டுமெனவும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் குறித்த பகுதி விவசாய போதனாசிரியரால் மஞ்சள் செய்கை பற்றிய மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டது. வயல் விழாவை தொடர்ந்து பயிர் சிகிச்கை முகாம் இடம்பெற்றது. இதன் போது விவசாயிகள் பயிர் பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களை பெற்றதுடன் நோய் மற்றும் பீடை தாக்கங்களிற்கான சிகிச்சை முறைகளையும் அறிந்து கொண்டார்கள். பாட விடய உத்தியோகத்தர்களால் பொருத்தமான சிபார்சு செய்யப்பட்ட பீடைநாசினிகள் போன்றனவும் பரிந்துரைக்கப்பட்டன.