புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை
கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது.

மேற்படி இரு பயிற்சிப் பட்டறைகளும் மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்களின் சிந்தனைத் திறனை விரிவுபடுத்திப் பல்வகைப்பட்ட நோக்கு அணுகுமுறைக் கோட்பாடுகளை விவசாய விரிவாக்க செயற்பாடுகளில் பின்பற்றி விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் நடாத்தப்பட்டது.

பயிற்சிப் பட்டறையின் முதலில் புவிசார் இடம் அறியும் முறமை (Global Positioning System) தொடர்பான விளக்கங்களும் செயன்முறைப்பயிற்சியும் வளவாளர்களாகக் கலந்து கொண்ட யாழ் மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் திரு.பி.சிவானந்தன் மற்றும் வரைபட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான திரு.எஸ்.தவசீலன் மற்றும் திரு.தி.தவரீசன் ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இத்தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விவசாயப் போதனாசிரியர் பிரிவு வாரியாக விவசாய விரிவாக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பிரதேசங்களின் விஸ்தீரணம், பயிர்ச்செய்கை விஸ்தீரணம், பயிரழிவு தொடர்பான விஸ்தீரணம், முன்மாதிரித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பகுதிகள் என்பனவற்றினை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் விவசாய நிலங்களில் முன்னெடுக்கப்படும் வயல்விழாக்கள் மற்றும் செய்முறைப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் இடங்களை அடையாளப்படுத்தி பங்குபற்றுநர்களிற்கு வழங்கக்கூடியதாகவிருக்கும்.

மேலும் இரண்டாவது பயிற்சி நெறியாக சமூக ஊடகமான “கொவிபொல” இன் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு Crop Trainee எனும் தனியார் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு உத்தியோகத்தர் திரு.சஜித்திரா ஜாப்பா அவர்களினால் மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது.

உற்பத்தி செய்யப்பட்ட தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் முகமாகவே இலங்கையின் விவசாய தகவல் தொடர்பு நிறுவனத்திடமிருந்து முதலாவது இணையவழி சந்தைப்படுத்தல் செயலி அதாவது கொவிபொல எனும் பயன்பாட்டு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எவ்வாறு பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் தம்மிடம் உள்ள பொருட்களிற்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது தொடர்பாக திரு.சஜித்திரா ஜாப்பா அவர்களினால் உத்தியோகத்தர்களிற்கு நேரடி செயன்முறை மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலி இல் தம்மிடம் உள்ள விவசாய உற்பத்திப் பொருட்கள் தொடர்பான விபரங்களை உற்பத்தியாளர்களான விவசாயிகள் மற்றும் விவசாயப் பெண்கள் முதலானோர் இற்றைப்படுத்துவதன் மூலம், இளைஞர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் கொள்வனவு செய்வோர் இலகுவாக தமக்குத் தேவையான உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள இச் செயலி பயன்படுத்தப்படுகின்றது.

இச் செயன்முறையின் பரம்பல் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கும் மற்றும் அதனைக் கொள்வனவு செய்வோருக்குமிடையில் காத்திரமான சந்தை இணைப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக இரு பிரிவினரும் நன்மையடைவார்கள்.