பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2023 ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2023 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வைபவம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 02.01.2023 அன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்; – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அவர்களால் மாகாணக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பங்கேற்பாளர்களது இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சேவை உறுதிமொழிகளை ஏற்கும் நோக்குடன் அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பிரதம செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அங்கு உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘ நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளும் எதிர்காலத்தில் எம் பிள்ளைகளை வந்தடையும் எனவும் அரசசேவையில் உணவு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் எம்மால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து கிராம மட்டத்திலுள்ள வறியவர்களுக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பானது எனவும் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தும் போது செலவு குறைவடைந்து வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார். இவ்வாறாக ‘நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு’ என்ற கருப்பொருளில் அமைந்த அரச கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் தனது கருத்துக்களை எடுத்துக்கூறிய அவர் அனைவருக்கும் புதிய ஆண்டிற்கான வாழ்த்து செய்தியினையும் தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக உதவிப் பிரதம செயலாளர் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டதுடன் இவ்வாண்டானது அனைவருக்கும் மகிழ்வும் நிறைவும் கொண்ட ஆண்டாக அமைய வேண்டும் என ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.